தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டங்களோடு அந்த தினத்தில் ரிலீசாகும் புதுப்படங்களை குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்தால் தான் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். இதனால் ஒவ்வொரு பண்டிகை வரும் போது கூடவே என்னென்ன படங்கள் ரிலீசாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களுக்கும் இருக்கும்.
அந்த வகையில் வரும் தீபாவளிக்கு இரண்டு புதிய படங்கள் ரிலீசாகவுள்ளது. முதலாவது சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்”. தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்துள்ள பிரின்ஸ் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் முதல் தீபாவளி ரீலிஸ் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் மற்றொரு படமாக கார்த்தி நடிப்பில் “சர்தார்” வெளியாகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடிக்க லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்தார் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இவ்விரு படங்களும் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 21) ஆம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டிருந்தது. அதில் “தீபாவளி திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 21 முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளை திரையிடலாம் எனவும், திரையிடப்படும் காட்சிகள் எண்ணிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.