கர்நாடகாவில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக 38 ஆசிரியர்களை சிஐடி நேற்று கைது செய்துள்ளது.


கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் 2ம் நிலை உதவி ஆசிரியர்கள் (2012-2013) மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் (2014-2015) பதவிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதுகுறித்து, விதான செளதா காவல்துறையினர் கடந்த ஆகஸ்டு மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்ந்து பூதாகரமாக வெடித்ததால் காவல்துறையினரிடமிருந்து சி.ஐ,டியிடம் மாற்றப்பட்டது. 


இந்தநிலையில், ஆசிரியர் பணி நியமன முறைகேடுகள் தொடர்பாக கர்நாடகாவில் 51 இடங்களில் 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தியதில் முறைகேடில் ஈடுபட்ட 38 ஆசிரியர்களை கர்நாடக சிஐடி நேற்று கைது செய்யப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


மாவட்டங்களின் அடிப்படையில் அதிகபட்சமாக கோலார் மாவட்டத்தில் 24 ஆசிரியர்களும், பெங்களூர் தெற்கு மற்றும் சித்ரதுர்கா மாவட்டத்தில் தலா 5 ஆசிரியர்களும், சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் 4 ஆசிரியர்கள் என மொத்தம் 38 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சிஐடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. 


ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகேட்டில் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபட்டதாக சிஐடி கண்டறிந்ததை அடுத்து, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே விதான செளதா மற்றும் ஹலசுரு கேட் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 22 பேரை கைது செய்த சிஐடி, அதன் தொடர்ச்சியாக 5 பேர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 12 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.