ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. இப்படியான சூழலில் பல ஆண்டுகள் முன் வெளிவந்த படங்களை ரீரிலிஸ் செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ஆச்சரியப்படும் வகையில் இந்தப் படங்களுக்கு புதிதாக வெளியான படங்களுக்கு  நிகராக கூட்டம் சேர்கிறது. சிறப்பு தினங்களை கொண்டாடப்படும் வகையில் இந்தப் படங்கள் வெளியிடப்படுகின்றன அல்லது ரசிகர்களின் கோரிக்கைகளுக்கேற்ப. அப்படி அண்மையில் மறுவெளியீடு செய்யப்பட்டப் படங்களைப் பார்க்கலாம்


 


விண்ணைத்தாண்டி வருவாயா




கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான கெளதம் மேனன் இயக்கிய படம் விண்ணைத்தாண்டி வருவாயா. சிம்பு  த்ரிஷா நடித்த இந்தப் படம் காதலைப் பற்றியப் படங்களில் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தப் பாடல்களை 12 ஆண்டுகளுக்குப் பிறகும் சலிக்காமல் ரசிகர்கள் கேட்டுவருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தப் படம் சென்னை வி.ஆர் மாலில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு தினமும் ஒரு காட்சி திரையிடப்பட்டது. பல மாதங்கள் ஓடிக்கொண்டிருந்தது. 


வேட்டையாடு விளையாடு






மறுபடியும் ஒரு கெளதம் மேனன் படம் வேட்டையாடு விளையாடு திரைப்படம் அண்மையில் அதன் 17 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் மறுவெளியீடு செய்யப்பட்டது. ஏதோ கமல் இப்போதுதான் நடித்து வெளியிட்டது போல் படத்தின் அத்தனைக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடின. மேலும் இதன் மூலம் ஒரு நல்ல வசூலையும் தயாரிப்பாளர் சம்பாதித்தார்.


டைட்டானிக்


எந்த காலத்தில் வெளியிட்டாலும் இந்தப் பட த்திற்கு வரும் ரசிகர்கள் இருக்கதான செய்வார்கள். 1997 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் இன்று வரை காவியக் காதல் படமாக பார்க்கப்படுகிறது. அண்மையில் காதலர் தினத்தன்று காதலர்கள் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டது.


வசந்தமாளிகை


 






 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் 1972 ஆம் ஆண்டு வெளியாகி அசுர வெற்றி பெற்ற வசந்த மாளிகைத் திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில் மாற்றப்பட்டு திரையிடப்பட்டது. சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் 2 கே கிட்ஸ்கள்வரை இந்தப் படத்தை பார்த்தனர்.