சிட்டிசன் படத்தில் அஜித்துடன் நடித்த நடிகர் மதுரை மோகன் அஜித் குறித்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
துணிவு ரிலீஸ்
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பின் இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார்- தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள துணிவு படம் நேற்று முன் தினம் (ஜன.11_ வெளியானது.
ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், சமுத்திரகனி, பகவதி பெருமாள், மோகன சுந்தரம், ஜான் கொக்கைன், அஜய் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். ஜிப்ரான் இசையில் பொங்கல் ரிலீசாக வெளிவந்துள்ள துணிவு, கடந்த இரண்டு நாள்களாக வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் ஒருபுறம் துணிவு படம் ட்ரெண்டாகி வரும் நிலையில், மற்றொரு புறம் நடிகர் அஜித் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள், சம்பவங்கள் வழக்கம் போல் இண்டர்நெட்டில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.
சிட்டிசன் பட நிகழ்வு
அந்த வகையில், நடிப்பு தாண்டி தன் தனி மனித வாழ்வு, எளிமைக்காக அவரது ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் நடிகர் அஜித் பற்றிய நெகிழச்செய்யும் சம்பவம் ஒன்றை சிட்டிசன் படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் மதுரை மோகன் பகிர்ந்துள்ளார்.
சிட்டிசன் படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மதுரை மோகன் முன்னதாக அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
”படக்குழுவினர் அனைவரும் மேக் அப் போட்டுவிட்டார்கள். அஜித் மட்டும் மேக் அப் போடவில்லை. ஏனென்றால் அஜித்தின் மேக் அப் அசிஸ்டெண்ட் இளைஞர் வரவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர் வேர்க்க விறுவிறுக்க வேகவேகமாக பையோடு ஓடி வந்தார். ”இரண்டு பஸ் மாரி வர்ரதுக்குள்ள லேட் ஆகிடுச்சு அண்ணே”னு அஜித்திடம் சொன்னார்.
தொடர்ந்து ”உங்களிடம் பைக் இல்லையா?” எனக் கேட்டார் அஜித். அதற்கு இல்லை என அந்த இளைஞர் பதில் அளிக்க பைக் ஓட்டத் தெரியுமா என விசாரிக்கத் தொடங்கினார். அதன் பின் மேக் போட்டு ஷூட்டிங் தொடங்கியது. தொடர்ந்து மாலை பேக் அப் சொல்லி கிளம்பும் நேரத்தில் ”நாளைக்கு மேக் அப் இளைஞர் லேட்டா வருவாரா” என விசாரித்துவிட்டு தன் மேனேஜரை கூப்பிட்டார்.
’எனக்கு இதெல்லாம் பிடிக்காது’
அதன் பின் கொஞ்ச நேரத்தில் திடீரென ஒரு புது ஹீரோ ஹோண்டா பைக் செட்டுக்கு வந்திறங்கியது. அதனை அந்த மேக் அப் இளைஞரை அழைத்துக் கொடுத்து, “இந்த பைக்க வச்சிக்கோ. இனிமேல் பைக்ல போ, பைக்ல வா. வேற எதுலயும் வராத” என்று கூறினார்.
தொடர்ந்து அந்த இளைஞர் உடனடியாக அஜித்திடம் மீண்டும் வண்டி சாவியைக் கொடுத்தார். அதற்கு அஜித் “ஏண்டா என்ன ஆச்சு?” எனக் கேள்வி கேட்க அந்த இளைஞர் ”அண்ணா, முதன்முதலா சாவி தரீங்க.. ஆசிர்வாதம் வாங்கிக்கறேன்” எனக் கூறி காலில் விழுந்தார்.
அதற்கு முதுகில் ஒரு போடு போட்டு ”எந்திரி.. எனக்கு இதெல்லாம் பிடிக்காது. இந்தா பைக் ஓட்டு” என்றார் அஜித். இதையெல்லாம் நாங்கள் நேரில் பார்த்து வியந்திருக்கிறோம்” எனப் பேசியுள்ளார் மதுரை மோகன்.
மதுரை மோகனின் இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.