உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டித் தொடரின் தொடக்க விழாவை நவீன்பட்நாயக் கடந்த 11-ந் தேதி தொடங்கி வைத்த நிலையில், அதிகாரப்பூர்வமாக போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன. 


உலகக்கோப்பை ஹாக்கி தொடர்


ஹாக்கி போட்டிகளில் உலகக்கோப்பை தொடர் கடந்த 1971 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யபப்ட்டது. முதல்முறையாக ஸ்பெயினில் நடந்த தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது. தொடக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை தொடர் நடைமுறையில் இருந்த நிலையில், 1978 ஆம் ஆண்டுக்குப் பின் விதிமுறைகள் 1978 ஆம் ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டது. 


தொடர்ச்சியாக 2வது முறை...


அந்த வகையில் 15வது உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இன்று முதல் தொடங்குகிறது. 2018 ஆம் ஆண்டு உலக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்தப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பை போட்டித் தொடர் நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 


ஜனவரி 29 ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஏ,பி,சி,டி ஆகிய 4 பிரிவுகளில் தலா 4 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா அணிகளும், பி பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது.  இதேபோல் சி பிரிவில், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி ஆகிய அணிகளும், டி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ்
ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது. 


இந்தியாவுக்கு வாய்ப்பு 


ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும். அதேசமயம் 2 மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2வது சுற்றில் மோதி அதிலிருந்து மேலும் 4 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். 


உலகக்கோப்பை ஹாக்கிப்போட்டி தொடரை பொறுத்த வரையில் இதுவரை 4 முறை சாம்பியன் ஆன பாகிஸ்தான் அணி இம்முறை தகுதிப்பெறவில்லை. அதற்கு அடுத்தப்படியாக நெதர்லாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.  இந்த முறை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து அணிகளுடன் இந்தியாவுக்கும் கோப்பையை வெல்லும் வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 


1971 ஆம் ஆண்டு 3வது இடம், 1973 ஆம் ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணி 1975 ஆம் ஆண்டு சாம்பியன் ஆனது. ஆனால் அதன்பிறகு 48 ஆண்டுகளாக கோப்பையை வென்றதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு தொடரில் இந்தியா காலிறுதியோடு வெளியேறியது. 


இந்தியா - ஸ்பெயின்


இன்றைய நாளில் பகல் 1 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் அர்ஜென்டினா- தென்னாப்பிரிக்கா அணிகளும், மதியம் 3 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ் அணிகளும் மோதுகின்றன. மேலும் மாலை 5 மணிக்கு நடக்கும் போட்டியில் இங்கிலாந்து-வேல்ஸ் அணிகளும், இரவு 7 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்தியா-ஸ்பெயின் அணிகளும் மோதுகின்றன. 


இந்திய அணியை ஊக்கப்படுத்தும் வகையில் சாம்பியன் கோப்பையை வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று ஒடிசா மாநில அரசும், தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியாவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.