அஜித் நடிப்பில் வரும் பொங்கலன்று வெளியாகவிருக்கும் படம் துணிவு. H.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், துணிவு படத்தின் அடுத்த சிங்கிள் பாடலுக்கான ஹிண்ட் ஒன்றை இசையமைப்பாளர் ஜிப்ரான் கொடுத்துள்ளார்.
ஜிப்ரான் ட்வீட்:
துணிவு படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. பட வேளைகள் முடிய முடிய, படக்குழுவும் துணிவு படத்தின் அப்டேட்டுகளை கொடுத்த வண்ணம் உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், ரசிகர்களுக்கு வாக்கு கொடுத்தது போலவே, சில்லா சில்லா பாடலையும் குறித்த நாளுக்குள் கொடுத்து அனைவரையும் உற்சாகப்படுத்தினர், துணிவு படக்குழுவினர். இந்நிலையில், துணிவு படத்திற்கான அடுத்த பாடலின் பெயரை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். காசேதான் கடவுளடா என்ற ஹேஷ்டேக்கை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பொங்கலுக்கு ரிலீஸ்:
வலிமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் டைட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, நடிகர் அஜித்தின் புகைப்படங்களும் படக்குழுவால் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வைரலாக்கப்பட்டது. இதையடுத்து, துணிவு திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
துணிவு Vs வாரிசு:
விஜய் நடிக்க, தெலுங்கு இயக்குனர் வம்சி பைடப்பள்ளி இயக்கும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, ஷ்யாம், சரத்குமார் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இந்த திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என முன்னரே தெரிவிக்கப்பட்டுவிட்டது. துணிவு படமும் பொங்கலின் போது வெளியாகவுள்ளதால், இரண்டு படங்களுக்குமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் கூடி வருகிறது.
15 மில்லியனை எட்டிய சில்லா சில்லா!
ஜிப்ரானின் இசையில் முன்னர் வெளியான சில்லா சில்லா பாடல், யூடியூபில் 15 மில்லியன் வியூஸ்களை எட்டியது. இது குறித்த பதிவையும் இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டிருந்தார்.
”எப்படியிருக்குமோ” என ரசிகர்கள் எதிர்பார்த்த சில்லா சில்லா பாடல், நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, செகண்ட் சிங்கிளுக்கான ஹைப்பும் தற்போது எகிறி வருகிறது. வங்கி கொள்ளையை மையக்கதையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘காசேதான் கடவுளடா’ என்ற பெயரில் பாடல் இடம் பெற்றுள்ளது ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டி வருகிறது. இந்த பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ட்விட்டர், இன்ஸ்டா என அத்தனை சமூக வலைதளங்களிலும் கேள்வி கேட்டு வருகின்றனர்.