தமிழகத்தின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான லெஜண்ட் சரவணன், ஆரம்ப காலங்களில் தனது துணிக்கடைகளின் விளம்பரப்படங்களில் நடித்து வந்தார். அதைதொடர்ந்து, பிரமாண்ட பொருட்செலவில் சரவணன் முதல் முறையாக தயாரித்து நாயகனாக அறிமுகமான தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஜூலை 2 ஆம் தேதி வெளியானது.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் உருவான இப்படத்தை,  ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.


ஆல்பம் பாடல்கள் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா ‘தி லெஜண்ட்’ படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமானர். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தமிழகமெங்கும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியானாலும், மிக மிக சுமாரான வரவேற்பையே பெற்றது.


திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய லெஜண்ட் சரவணன்:


இந்நிலையில் கோயம்புத்தூர் அவிநாசி ரோடு விரியம்பாளையம் சாலையில் பிரைடல் ஸ்டுடியோ திறப்பு விழா நடைபெற்றது. இதனை பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். அவருடன் நடிகர்கள் ரோபோ சங்கர், அப்புகுட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய சரவணன், கோவையில் கலை ரசனை உள்ளவர்கள், அவர்களுக்காக பிரைடல் மேக்கப் நூறு நிறுவனத்தை நூர் முகமது துவக்கி வைத்துள்ளார். அவருடைய கடினமான உழைப்பு பாராட்ட தகுந்தது. பொதுவாக  கடுமையாக உழைப்பவர்களை, தொழிலை நேசிப்பவர்களை நான் நேசிப்பேன். எனக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைப்புகள் இருந்தாலும் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு செல்வதில்லை.

ஆனால் கலைத்துறையாளர்களுக்கு மேக்கப் துறை முக்கியம் பங்கு வைக்கிறது. அவற்றை முழுமையாக நேசித்து சேவை செய்து வருகிறார் நூர் முஹம்மது. அவருடைய அன்பால் ஈர்க்கப்பட்டு அவருடைய கடின உழைப்பை நேசித்து இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன். நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவை மக்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி என நடிகர் லெஜண்ட் சரவணன் கூறினார்


நான் அரசியலுக்கு வருவேனா?


பின்பு செய்தியாளர்களிடம் பேசியபோது,  தன்னுடைய அடுத்த படத்தின் கதை விவாதம் சென்று கொண்டிருக்கின்றது. விரைவில் அறிவிப்பு வெளிவரும்’ என்று கூறினார். கலைத்துறையில் இருப்பவர்கள் அடுத்த கட்டம் அரசியலுக்கு செல்வது தொடர்பான கேள்விக்கு, அரசியல் வருகை என்பது அந்த மக்களும் மகேசனும்தான் முடிவு செய்யவேண்டும். அரசியலில் மக்களின் சிந்தனை மற்றும் எண்ணங்கள் ரொம்ப வேகமாகச் செயல்பட்டு வருகிறது என்றார். மேலும், தமிழக அரசின் செயல்பாடு தொடர்பான கேள்விக்கு,  தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்றும் லெஜண்ட் சரவணன் பதிலளித்தார்.