பொங்கலிற்கு வெளியாகும் துணிவு:


அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி, சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் துணிவு. ஹெச். வினோத், போனி கபூர் மற்றும் நடிகர் அஜித் குமார் ஆகியோர் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் துணிவு. வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம், வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது.




துணிவு படத்தில் ”சில்லா சில்லா” பாடலும், “காசேதான் கடவுளடா” என்ற பாடலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அது மட்டுமன்றி, படத்தின் ஹீரோவான அஜித்தின் எக்ஸ்க்ளூசிவ் லுக்ஸ் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில், பெரிய வெள்ளைதாடி தலை முழுவதும் வெள்ளைமுடி என்று கெத்தாக போஸ் கொடுத்திருந்தார் அஜித். இதனால், அஜித் ரசிகர்கள் படு குஷியில் துணிவு படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர். இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகளும் நடைப்பெற்று வருகிறது. அந்த வைகயில், இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. 


கால்பந்து போட்டியில் துணிவு ப்ரமோஷன்:


அர்ஜன்டினா  மற்றும் ஃப்ரான்ஸ் அணிகளுக்கு இடையேயான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நேற்று கத்தாரில் நடைப்பெற்றது. இதனை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், யுவன் சங்கர் ராஜா, மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் கண்டுகளித்தனர். இதில், சுவாரஸ்யமான சில சம்பவங்களும் நடைப்பெற்றது. அந்த வரிசையில் துணிவு படத்தின், மலேசிய விநியோகிஸ்தர் மற்றும் அஜித் ரசிகரான வெங்கடேஷ் என்பவர், அப்படத்தின் போஸ்டர் பதிந்த டீ-ஷர்டை அணிந்தவாறு உலக்கோப்பை போட்டியை கண்டு ரசித்துள்ளார்.






அதோடு நிறுத்திக்கொள்ளாமல், துணிவு டீ ஷர்ட் அணிந்து, கையில் டம்மி கோப்பையுடன் போட்டோ எடுத்து ட்வீட்டும் செய்துள்ளார். இதனால், “நாடு விட்டு நாடு போய் துணிவு படத்துக்கு ப்ரமோஷன் செய்ராங்களே..” என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


தொடர்ந்து தொடரும் அஜித் ரசிகர்களின் அட்ராசிடீஸ்!


துணிவு படத்திற்கு முன்னர், அஜித் நடித்த படம் வலிமை. கொரோனா, படப்பிடிப்பு தாமதம் என பல காரணங்களினால், இப்படத்தின் அப்டேட்டுகள் வெளிவர பல நாட்கள் எடுத்தது. இதனால், அஜித் ரசிகர்கள் பலர் “வலிமை அப்டேட்..வலிமை அப்டேட்” என படக்குழுவைச் சேர்ந்தவர்கள் செல்லுமிடமெல்லாம் கத்திக் கூப்பாடு போட்டு வந்தனர். அந்த சமயத்தில், ஐ பி எல் போட்டியில் சென்னை அணி பங்கேற்ற போது கூட, சம்பந்தமே இல்லாமல் அணியின் வீரர் முகமது அலியிடம் வலிமை அப்டேட் கேட்டனர். ரசிகர்களின் இந்த செயலினால், படத்திற்கு பத்து காசு செலவு இன்றி, தாறுமாறாக ப்ரமோஷன் நடைப்பெற்றது. அதே போன்று, இப்போதும் கால்பந்து போட்டியில் இச்சம்பவம் நடந்துள்ளதால், மக்கள் பலர் “இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு” என ரசிகர்கள் பலர் குமுறி வருகின்றனர்.