துணிவு படம் ஐந்து நாள்களில் 150 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Continues below advertisement


நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகர் அஜித் ஆகியோர் கூட்டணியில் வெளியான படம் “துணிவு”. இந்த படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். துணிவு படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. 


வெற்றிப்பாதையில்...


வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லர் வங்கிக்கொள்ளையை மையப்படுத்தி ஆக்சன் தூக்கலாக இருந்ததை அடுத்து படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கு நேர் எதிராக சமூகக் கருத்துடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தல பொங்கலாக அமைந்து வசூலைக் குவித்து வருகிறது துணிவு.


150 கோடி வசூல்


இந்நிலையில், வெளியான ஐந்து நாள்களில் உலகம் முழுவதும் துணிவு படம் 152.60 கோடி வசூலைக் குவித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.






மேலும், தமிழ்நாட்டில் மட்டும் துணிவு படம் 79.94 கோடி வசூலித்துள்ளதாகவும், லண்டன், வட அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இதுவரை அதிகம் வசூலித்த அஜித் படமாக உருவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் விடுமுறை இன்னும் முடியாத நிலையில், துணிவு படம் மேலும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


துணிவா, வாரிசா?


மறுபுறம் பொங்கல் ரிலீசாக வெளியான வாரிசு படம், குடும்ப ஆடியன்ஸ்களைக் கவர்ந்து, தொடர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் போட்டிபோட்டு வருகிறது.  இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்துள்ள வாரிசு உலக அளவில் 150 கோடி வசூலைக் கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், துணிவு - வாரிசு இரண்டில் யார் வெற்றியாளர் என தனித்து குறிப்பிட முடியாத நிலையில் வேறு வேறு ஜானரில் வெளியான இரண்டு படங்களும்  தொடர்ந்து வசூலில் முன்னிலை வகித்து வருகின்றன.