ஒரு படத்தின் வெற்றி எந்த அளவிற்கு அப்படத்தின் அங்கமாக இருந்த அனைவரையும் உயர்த்துமோ அதே அளவிற்கு அப்படத்தின் தோல்வியும் அவர்களை மிக மோசமாக பாதிக்கும். ஆனால் ஒரு சில படங்கள் மிகவும் சுமாராகவும் பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அதன் பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவது என்பது ஒரு அசாதாரணமான ரகம். 


 



படம் சுமார் பாட்டு தாறுமாறு :


அந்த வகையில் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்,முன்னணி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான திரைப்படம் 'பீஸ்ட்'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், ட்ரோல் கன்டென்டாக மாறி, இன்றும் அவை சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், படத்தின் ரிலீஸுக்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பை எகிற வைத்தது அதில் இடம் பெற்ற ‛அரபிக் குத்து’ பாடல் தான். 


 






தெறிக்கவிட்ட விஜய் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் :


அனிருத் இசையில் , ஜானி மாஸ்டர் நடனம் அமைத்த அந்த பாடல், லிரிக் வீடியோவாக வந்ததிலிருந்தே பயங்கர எதிர்பார்ப்பையும், வியூவ்ஸ்களையும் அள்ளியது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் விஜய்-பூஜாவின் வித்தியாசமான நடன அமைப்பு அந்த பாடல் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, நீண்ட நாட்களுக்குப் பின் விஜய் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் இப்படத்தில் பாராட்டுகளை குவித்தது. 


 






வியூஸ்களை எகிறவைத்த அனிருத்-ஜோனிடா காம்போ :


ஒரு பக்கம் படம் குறித்த விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் 'அரபிக்குத்து'  பாடல் மட்டும் தொடர்ந்து சாதனையை நிகழ்த்தி கொண்டு இருந்தது. அந்த வகையில் இப்பாடல் தற்போது 500 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் கடந்து சாதனை படைத்தது வருகிறது. இப்பாடலின் மற்றொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் இப்பாடலின் வரிகளை எழுதியவர் நடிகர் சிவகார்த்திகேயன். அனிருத்-ஜோனிடா காந்தி குரலில் இந்த பாடல் அமோகமான ஹிட் பாடலாக அமைந்தது. இவர்களின் காம்போ ஒரு சூப்பர் ஹிட் காம்போ என ரசிகர்கள் மேலும் பல பாடல்களை இவர்களின் ஜோடியில் கேட்க ஆசை படுகின்றனர்.