பாரதிராஜா மகன் மனோஜ்
பாரதி ராஜாவின் மகன், மனோஜ் பாரதி ராஜா (48) நேற்று மாலை 6 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விஜய் , கமல் , ரஜினி என முன்னண்டி நடிகர் மற்றும் திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
"நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என கமல் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.
தன்னுடைய தந்தை இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. 10-திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், இயக்குனராகவும் பிரபலமான மனோஜ் பாரதிராஜாவுக்கு, சில நாட்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் நடந்த நிலையில்... நேற்று மாலை சேத்துப்பட்டில் உள்ள அவருடைய வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
கதறி அழுத பாரதிராஜா
மனோஜின் உடல் தற்போது நீலாங்கரையில் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. மாலை 4: 30 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. தன் மகன் இறந்த செய்தியைக் கேட்ட பாரதிராஜா உடனடியாக நீலாங்கரைக்கு வந்தார். தனது மகனைப் பார்த்ததும் பாரதிராஜா கதறி அழத் தொடங்கினார். இந்த காட்சி பார்ப்போர் அனைவரது மனதையும் கலங்க வைத்துள்ளது .
மகனுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
பாரதிராஜா கடந்த ஆண்டு பிறந்த நாளை தனது மகனுடன் கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்த பாரதிராஜா தற்போது மகன் இறப்பால் உடைந்து போய் நிற்பது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது