நடிகை த்ரிஷாவை அநாகரிகமாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டுமென காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 


கடந்த அக்டோபர் மாதம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் த்ரிஷாவுக்கும், தனக்கும் காட்சிகள் வைக்கப்படவில்லை என அப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பில், மீண்டும் அதே விஷயத்தை சொல்ல முயன்ற அவர் அநாகரீகமான வார்த்தைகளை பேச தொடங்கினார். 


இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. நடிகை த்ரிஷா தொடங்கி திரையுலகினர் பலரும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் அவர் பகிரங்கமான மன்னிப்பு கேட்க வேண்டுமென அறிக்கை வெளியிட்டது. மேலும் தேசிய மகளிர் ஆணையமும் தனது கண்டனத்தை பதிவிட்டதோடு , மன்சூர் அலிகான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


முன்னதாக இந்த விவகாரம் பெரிதாக தொடங்கியதும் அவர் விளக்கம் ஒன்றை அளித்தார். ஆனால் அதிலும் தன்னுடைய பேச்சின் தவறை உணராமல் பேசியதாக விமர்சிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், ‘ நீட் தற்கொலை, மணிப்பூர் சம்பவம் என எதிலுமே செயல்படாமல் தன்னுடைய விஷயத்தை பெரிதாக பார்ப்பதாக தேசிய மகளிர் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தார்.


மேலும் விளக்கம் கொடுக்காமல் தன் மேல் எந்த தவறுமே இல்லை’ என்ற ரீதியில் கடுமையாக பேசினார். நடிகர் சங்கம் தன்னிடம் கால அவகாசம் கொடுத்து உரிய விளக்கத்தை பெற வேண்டுமெனவும் கூறினார்.  அவரின் ஒவ்வொரு கருத்தும் இணையவாசிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்படியான நிலையில் நடிகை த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நாளை ஆஜராக வேண்டும் என சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை சம்மன் வழங்கியுள்ளது. நேராக வீட்டுக்குச் சென்ற போலீசார் அங்கு மன்சூர் அலிகான் இல்லாத நிலையில் அவர் மனைவியிடம் சம்மனை வழங்கியுள்ளார்கள். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.