கேள்வி : பாரதிராஜாவுடன் வேலை சேர்ந்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள.


தியாகராஜா குமாரராஜா : பாரதிராஜா பற்றி சொல்லவேண்டுமென்றால் வாழ்க்கையின் உந்துசக்தி என்று நாம் சொல்வோம் இல்லையா அந்த உந்துசக்தியை எப்போதும்  உயிர்ப்புடன் வைத்திருப்பவர் என்று சொல்லலாம். இத்தனை வயதிலும் இன்றைய தலைமுறையினருக்கு நிகராக கலையில் இயங்க ஆசைபடுகிறார் அவர்.


மாடர்ன் லவ் தொடரின் அவருக்குக் கொடுக்கப்பட்ட பறவைக் கூட்டில் வாழும் மான்கள் கதையில் அவருக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அதனை ஒரு தொழிலாக கருதி அதனை மதித்து செய்கிறார் இல்லையா? அங்க நிக்கறார்.



கேள்வி: மாடர்ன் லவ் தொடருக்காக முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்து வேலை செய்த அனுபவம் எப்படி இருந்தது. அவருக்காக உங்களது அனுகுமுறையில் ஏதாவது மாற்றங்கள் செய்தீர்களா ?


இளையராஜாவின் அனுபவம் மற்றும் அவரைப் பற்றி நாம் கேள்விப்படும் விஷயங்களை எல்லாம் வைத்துக்கொண்டு அவரை பார்க்கப்போகும்போது ஒரு சின்ன பதற்றம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவரை முதல்முறையாக சந்தித்தபோதே அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று நிரூபித்துவிடுவார் அவர். எனக்கு பெரிதாக இசையைப் பற்றித் தெரியாது எல்லோரும்போல பாடல்கள் கேட்பேன் அதில் எனக்கு பிடித்த பாடல் எது என்று எனக்கு சொல்லத் தெரியும். என்னுடைய இசை ரசனை என்பது இந்த அளவிற்குதான். அதேமாதிரி என்னுடைய படத்திற்கு இந்த பாட்டு சரியாக இருக்கும், இருக்காது என்பது எனக்குத் தெரியும். இளையராஜாவிடமும் இதே மாதிரியான ஒரு முறைதான்.


கேள்வி: இயக்குநர்கள் ஒரு முறையாவது இளையராஜாவுடன் பணியாற்ற வேண்டும் என்று சொன்னீர்கள். புதிய இயக்குனர்கள் இளையராஜாவை எப்படி அனுக வேண்டும்? அவர்களிடன் இளையராஜா என்ன எதிர்பார்க்கிறார்?


 தியாகராஜா குமாரராஜா: நீங்கள் எந்த மாதிரியான கதையை  கொடுத்தாலும் அந்த கதை அவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அதற்கு அவர் இசையமைத்துக் கொடுப்பார். இயக்குநர்கள் இளையராஜாவை அணுகும்போது தங்களது கதைக்கு  எந்த மாதிரியான இசை தேவை என்வதில் தெளிவாக இருக்க வேண்டும். தனக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று அவரிடம் கேட்கவும் சொல்லவும் தெரிந்தால் போதும்.


கேள்வி: பாலாஜி சக்திவேலுடன் பணிபுரிந்த அனுபவம்  எப்படி இருந்தது.


தியாகராஜா குமாரராஜா: எந்த ஒரு கதையை படித்தாலும் சரி அதை முடிந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமான ஒரு காட்சியாக்குவதற்கு முழு முயற்சி செய்யக்கூடியவர் பாலாஜி சக்திவேல். ஒரு கதையை அடிப்படையாக உணர்வுகளாக அணுகுவதில் அவரிடம் கற்றுகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.


கேள்வி: முழுவதும் தியாகராஜா குமாரராஜா எழுதி தியாகராஜா குமாரராஜா இயக்கிய ஒரு படத்தை எப்போது எதிர்பார்க்கலாம்


தியாகராஜா குமாரராஜா: (சிரிக்கிறார்) எனக்குமே கூட ஆசைதான். ஆனால் அதற்கு  நல்ல கதை தோன்ற வேண்டுமே…. நீங்கள் குழந்தை உயரமாக வளரணும் என்று ஆசைப்படுகிறீர்கள், குழந்தைக்கும் வளர ஆசைதான் ஆனால் அது வளர வேண்டுமே. அது யார் கையிலும் இல்லை.