தஞ்சாவூர்: ராஜராஜசோழன் முடியாட்சி காலத்தில், குடியாட்சி நடத்தினார். ஆனால் தற்போது குடியாட்சியில் முடியாட்சி நடத்தி வருகிறார்கள். செங்கோல் கொடுப்பது என்பது ஒரு ஏமாற்று வேலை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.


தஞ்சாவூரில் 65 அடி உயர கட்சி கொடியை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; 


கள்ளச்சாராயம், விஷசாராயம் என ஊடகங்களில் தான் கூறப்படுகிறது. ஆனால், மாவட்ட நிர்வாகம் அது போன்று கூறவில்லை. முதலில் மெத்தனால் குடித்து இறந்தார்கள் என்றார்கள். தற்போது, அதில் இருந்து ஒரு படி மேலே போய் சயனைடு என கூறியுள்ளனர்.  


அரசே தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளது. மது குடித்த சிலர் உடனே இறந்து விடுகிறார்கள். சிலர் 10,15 ஆண்டுகள் கழித்து இறக்கிறார்கள். ஆனால் மரணம் நிச்சயம் உள்ளது. கொடிய விஷத்தை நமது மக்களுக்கு கொடுக்கிறோம் என வருத்தம் கொஞ்சம் கூட இல்லை.  திமுக எதிர்கட்சியாக இருந்த போது ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மது ஒழிப்பு தான் என்றார்கள். 


இது போன்று கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பேசியுள்ளனர். ஆனால் இதுவரை வாய் திறக்கவில்லை. டாஸ்மாக்கில் விற்பனையாகும் சரக்கின் விலை அதிகம் என்பதால், இது போன்ற கள்ளச்சாராயத்தை தேடி குடிப்பவர்கள் செல்கின்றனர். எனவே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் கள் விற்பனை உள்ளது போல, தமிழகத்திலும் ஏன் கள் விற்பனையை அனுமதிக்கக் கூடாது.


வருமான வரித்துறை சோதனையில் இரு தரப்பிலுமே தவறு உள்ளது. செந்தில் பாலாஜி கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருந்தால் வருமான வரித்துறை சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என கூற வேண்டியது தானே. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்தபோது அவருடைய ரசிகர்கள் இதுபோல் முற்றுகை செய்திருந்தால் எப்படி சோதனை செய்திருக்க முடியும்.


வருமானவரித்துறை சோதனை செய்ய வரும்போது எஸ்.பி.க்கு சொல்லிவிட்டு வரவேண்டிய அவசியம் இல்லை. இது கூட எஸ்.பி.,க்கு தெரியாதா? பா.ஜ., தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, தமிழ், தமிழர்கள் என கூவி வருகிறார்கள். சோழர்கள் காலத்தில் இந்த செங்கால் தான் இருந்ததா?, ராஜராஜசோழன் முடியாட்சி காலத்தில், குடியாட்சி நடத்தினார்.


ஆனால் தற்போது குடியாட்சியில் முடியாட்சி நடத்தி வருகிறார்கள். கொடுங்கோல் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. செங்கோல் கொடுப்பது என்பது ஒரு ஏமாற்று வேலை. இதனால் தமிழர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கும் அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையை ஏன் உள்ளே வைக்காமல்  வெளியே நிறுத்தி இருக்கிறார்கள்.


செங்கோலை கொடுக்கும்போது ஆதீனங்கள் தேவாரம் பாடும் போது ஏன் இன்னும் பெரிய கோவிலில் உள்ளே பாடவில்லை, ஒரு வேளையாவது பாட சொல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண