ரீ-ரிலீஸ் படங்கள் தியேட்டரில் கல்லா கட்டி வரும் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் பல புதிய படங்கள் இன்று ரிலீசாகியுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.
அரண்மனை 4
சுந்தர் சி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், தமன்னா, ராஷிக்கண்ணா, விடிவி கணேஷ், யோகிபாபு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “அரண்மனை 4”. ஹிப் ஹாப் தமிழா இசையமைத்த இந்த படம் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ரிலீசாகியுள்ளது. முன்னதாக 2014 அரண்மனை, 2016ல் அரண்மனை 2, 2021ல் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
குரங்கு பெடல்
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மதுபானக்கடை, வட்டம் ஆகிய படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கியுள்ள படம் “குரங்கு பெடல்”. ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் என பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள குரங்கு பெடல் படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது.
அக்கரன்
குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “அக்கரன்”. அருண் கே பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கபாலி விஸ்வநாத், வெண்பா, ஆகாஷ் பிரேம்குமார், பிரியதர்ஷினி அருணாச்சலம், மஹிமா என பலரும் நடித்துள்ளனர். பார்க்கிங் மாதிரி இந்த படத்தின் கதை வில்லங்கமாக இருக்கும் என எம்.எஸ்.பாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதியவரை மையப்படுத்திய அக்கரன் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சபரி
நடிகை வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் “சபரி”. மஹா மூவிஸ் சார்பில் மகேந்திர நாத் கொண்ட்லா இப்படத்தை தயாரிக்க அனில் கட்ஸ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்திய மொழிகளில் சபரி படம் வெளியாகிறது. இப்படத்தில் கணேஷ் வெங்கட் ராம், சுனைனா, மைம் கோவி, ஷஷாங்க், ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, என பலரும் நடித்துள்ளனர்.
நின்னு விளையாடு
சி.சௌந்தரராஜன் இயக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ், நந்தனா ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள படம் “நின்னு விளையாடு”. தீபா சங்கர், பசங்க சிவகுமார், சாவித்திரி என பலரும் நடித்துள்ள இந்த படத்தை ராஜ் பீகாக் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் குடும்பத்தினரை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.