Aranmanai 4 Movie Review in Tamil: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் ஒரு சீரிஸ் திரைப்படம் போல் வெளியாகி வருகிறது அரண்மனை. இந்த படத்தின் முதல் பாகம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சுந்தர்.சி தொடர்ந்து இதன் பாகங்களை எடுத்து வருகிறார். அந்த வகையில், இதன் இரண்டாம் பாகம் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் அதே கதையை மூன்றாவது பாகமாக எடுத்தபோது தோல்வியை தழுவினார்.


அரண்மனை 4:


இந்த நிலையில், அதன் நான்காவது பாகமாக அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார். பேய் படம், அரண்மனை, அதைத்தடுக்கும் நாயகனாக சுந்தர்.சி என்று ஏற்கனவே வந்த அரண்மனை படங்களால் இந்த படமும் அப்படியேதான் இருக்கப் போகிறது என்ற ரசிகர்களின் மனப்பான்மையே சுந்தர்.சிக்கு மிகப்பெரிய சவாலாக இந்த படத்தில் இருக்கிறது. அதை அவர் வென்றாரா? இல்லையா? என்பதை கீழே காணலாம்.


10 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிச்சென்று காதல் திருமணம் செய்து கொண்ட தங்கை தமன்னா தற்கொலை செய்து கொண்டதாக அண்ணன் சுந்தர்.சி.க்கு தகவல் கிடைக்கிறது. தங்கையின் கணவர் சந்தோஷ் பிரதாப்பும் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தங்கையின் வீட்டிற்கு செல்லும் அண்ணன் சுந்தர்.சி தனது தங்கையும், அவரது கணவரும் எப்படி இறந்தனர்? தனது தங்கை தங்கியிருந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்களின் பின்னணி என்ன? தனது தங்கை மகளை கொல்லத் துடிக்கும் பேய் யார்? அந்த பேயிடம் இருந்து தனது தங்கை மகளை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் கதை.


நகைச்சுவை கை கொடுத்ததா?


ஏற்கனவே வந்த அரண்மனை படங்களின் கதைகளை போலவே கதை இருந்தாலும், இந்த முறை வழக்கமான அரண்மனை படங்களில் இருக்கும் கவர்ச்சி, குத்து டான்ஸ், காதல் போன்றவற்றை சுந்தர்.சி தவிர்த்திருப்பதை பாராட்டலாம். கதையே வழக்கமான கதை  என்பதால், வழக்கமான இந்த காட்சிகளும் இருந்தால் படத்தின் வேகத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதே சுந்தர்.சி.யின் இந்த முடிவிற்கு காரணமாக அமைந்திருக்கும்.


சுந்தர்.சி படங்கள் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்திலும் யோகி பாபு, வி.டி.வி. கணேஷ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், லொள்ளு சபா சேசு என்று பெரிய பட்டாளமே உள்ளது. ஆனால், பிரதான காட்சிகள் யோகி பாபுவிற்கும், வி.டி.வி. கணேஷ், கோவை சரளாவிற்கே உள்ளது. இவ்வளவு பெரிய நட்சத்திர நகைச்சுவை பட்டாளங்கள் இருந்தும் 100 சதவீத சிரிப்புக்கு கியாரண்டி தர இயலவில்லை.


பலம் என்ன?


ஆனால், அதேசமயம் லொள்ளு சபா சேசு தான் வரும் இடங்களில் எல்லாம் நம்மை சிரிக்க வைத்துவிடுகிறார். கோவை சரளாவுடனான காதல் காட்சிகளில் வரும் வசனங்கள் அனைவரையும் கைதட்டி ரசிக்க வைக்கிறது. படத்தின் இறுதிக்காட்சிக்கு முன் வரும் சேசு, யோகி பாபு, கோவை சரளா மற்றும் விடிவி கணேஷ் நகைச்சுவை கண்டிப்பாக நம்மை சிரிக்க வைக்கும். அதுவும் அந்த அவெஞ்சர்ஸ் தீம் மியூசிக் பாராட்ட வேண்டிய விஷயம்.


இதற்கு முன்பு வந்த அரண்மனை படங்களில் அரண்மனையே பிரதானமாக இருந்த நிலையில், இந்த படத்தில் அரண்மனை என்ற உணர்வே தராத அளவிற்கு இயல்பாகவே அந்த வீடு காட்டப்பட்டிருக்கும். அதேபோல, படத்திற்கு பெரிய பலமாக இருப்பது அந்த அடர்ந்த காடும், இருட்டும். குறிப்பாக, இடைவேளைக்கு முன்பு வரும் 20 நிமிடங்கள் மிகுந்த விறுவிறுப்பான காட்சியாக அமைகிறது. கே.ஜி.எப். வில்லன் கருடா கதாபாத்திரத்தில் நடித்த ராமச்சந்திர ராஜூ சாமியார் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 


தமன்னா, ராஷி கண்ணா நடிப்பு எப்படி?


அதேபோல, இதுவரை தமன்னா நடித்த படங்களில் பெரும்பாலும் கவர்ச்சி நாயகியாகவே, கதாநாயகனை காதலிக்கும் பெண்ணாகவே உலா வந்தவருக்கு இந்த படத்தில் நல்ல அருமையான தாய் வேடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகளை காப்பாற்ற அவர் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே போராடுவது படம் பார்ப்பவர்களை படத்துடன் ஒன்றவைத்தது. தமன்னாதான் படத்தின் பலம் என்பதற்கு அந்த காட்சி உதாரணமாக அமைகிறது. ராஷி கண்ணாவிற்கு படத்தில் பெரிய வேலை இல்லை.


இறுதிக்காட்சியில் வழக்கமான சினிமா பாணியில் சுந்தர் சி தனது மனைவி குஷ்புவையும், சிம்ரனையும் ஆட வைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சி பாளையத்தம்மன், அம்மன் போன்ற சாமி படத்தை நமக்கு ஒரு நிமிடம் நினைவூட்டுகிறது. இதற்கு முன்பு வந்த அரண்மனை படங்களில் பின்பற்றிய சில கவர்ச்சி, காதல், பிளாஷ்பேக் போன்ற விஷயங்களை இந்த படத்தில் சுந்தர்.சி தவிர்த்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. படத்தில் வரும் குழந்தைகளின் நடிப்பு அபாரம். ஆனால், பெரியளவில் படத்தை பார்த்து ரசிகர்களுக்கு பயம் எல்லாம் ஏற்படவில்லை என்பதே உண்மை. 


கோடை விடுமுறைக்கு போகலாமா?


இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று அரண்மனை 4 பார்க்கலாம். குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி. அந்த காடுகள், இருளில் நடக்கும் காட்சிகளை அற்புதமாக படமாக்கியுள்ளார். எடிட்டர் பென்னி ஆலிவர் எடிட்டிங்கும் சிறப்பாக அமைந்துள்ளது.