ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் குறித்து முழுமையாக தகவல் சேகரித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்


சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் "RED SANDAL WOOD " படத்தை  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  தொல். திருமாவளவன் பார்வையிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “Red sandal wood திரைப்படத்தை பார்த்தோம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குனர் குரு ராமானுஜம் எடுத்ததாக தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு ஆந்திர காடுகளில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் தமிழகத்தில்போராட்டங்கள் வெடித்தது. அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இந்த 8 ஆண்டுகளில் நாம் அதையெல்லாம் கடந்து மறந்து அப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்பது நினைவில் இல்லாமல் இருக்கிறோம். 


இந்த சூழலில் உண்மையான சம்பவத்தை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து இயக்குனர் குரு ராமானுஜம் படத்தை எடுத்துள்ளதாக தெரிவித்தார். தமிழர் வரலாற்றில் மறக்க முடியாது கொடூரம் தமிழர்கள் ஆந்திராவில் கொல்லப்பட்டது என தெரிவித்தார். அப்போது திருமாவளவனிடம், “ஆந்திர அரசு இப்போதும் தமிழர்களை கைது செய்து வருகிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் குறித்து முழுமையாக தகவல் சேகரித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என தெரிவித்தார். 


தேசிய விருது குறித்து கருத்து


தொடர்ந்து செய்தியாளர்கள், “ஜெய்பீம் படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது” குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த திருமாவளவன், “நடிகர் பிரகாஷ்ராஜ் சொன்னது போல காந்தியை கொன்றவர்கள், அம்பேத்கரின் அரசமைப்பு சட்டத்தை சிதைக்கிறவர்கள் எப்படி ஜெய்பீம் படத்துக்கு விருது கொடுப்பார்கள்? என கூறியதை நான் வழிமொழிகிறேன்”. எல்லோரையும் பாராட்டையும் பெற்ற அந்த படத்திற்கு விருது கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாததற்கு, உங்களுக்கு இருக்கும் ஏமாற்றம்தான் எனக்கும் என கூறினார். 


தேசிய விருது தேர்வு செய்யும் குழுவில் தமிழரான இயக்குநர் வசந்த்  இருந்தும் தமிழ் படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், தமிழர்கள் இடம் பெற்றிருப்பதால்  நேர்மையாக இருப்பார்கள் என்பதறிக்கில்லை. அவரைப்போல தான் அண்ணாமலையும். அவர் தமிழர் தான். ஆனால் அண்ணாமலை செய்யும் அரசியல்  தமிழக மண்ணுக்கு ஒவ்வாத அரசியல் என திருமாவளவன் பதிலளித்தார்.