விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூா் சுற்றுவட்டார பகுதியான திருவக்கரை, தொள்ளாமூா், எறையூா், பெரும்பாக்கம் பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் பாறைகள் ராட்சத இயந்திரங்கள் மூலம் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவைகளாக மாற்றப்பட்டு கட்டுமானம், சாலை அமைக்கும் பணிக்காக உள்ளூா் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு டிப்பர் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.


கல்குவாரி விவகாரம்:


இந்த கல் குவாரிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், கனிம வளத்துறையினரால் அனுமதிக்கப்பட்ட அளவை கூடுதல் ஆழங்களில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்கள், கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் கனிம வளத் துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில், வானூா் வட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் செயல்படும் தனியாா் கல்குவாரியில் அளவுக்கு அதிகமாகவும், கூடுதல் ஆழத்தில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகக் கூறி, இந்தக் கல்குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தி பெரும்மபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் கல்குவாரியை முற்றுகையிட்டனர்.


முற்றுகையில் பங்கேற்ற பெரும்பாக்கம் ஊராட்சித் தலைவா் ராஜாங்கம் கல்குவாரி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  தகவலறிந்து வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று கல் குவாரியைப் பாா்வையிட்டனா். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 


பெரும்பாக்கம் ஊராட்சித் தலைவா் ராஜாங்கம் கூறியதாவது :- பெரும்பாக்கம் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 3 வருடங்களாக பல கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிகின்றனா். இந்த நிலையில், கல்குவாரி நிா்வாகத்தினா் கடந்த 2 ஆண்டுகளாகத் தொழிலாளா் வரி, தொழில் வரியும் ஊராட்சி நிா்வாகத்துக்கு செலுத்தவில்லை என்றும்  இது குறித்து முறையாக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டும் எவ்வித பதிலும் இல்லை. இதன் தொடா்ச்சியாகவே கிராம மக்களின் பாதுகாப்பு கருதி முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என கூறினார்.