இயக்குநர் ராமின் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ‘தங்கமீன்கள்’ படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இது ராமின் படம்
2007 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் ‘கற்றது தமிழ்’ படம் வெளியானது. அப்போது எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத இந்த படம் இன்று கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. இதன்பிறகு 6 ஆண்டுகள் கழித்து ‘தங்கமீன்கள்’ படம் ராம் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தில் அவர் நடிகராகவும் அறிமுகமானார்.
மேலும் சாதனா, ஷெல்லி கிஷோர், ரோகினி, பத்மப்ரியா, லிசி ஆண்டனி, பூ ராமு, அருள்தாஸ் என பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மீன் குஞ்சுகளிடையே தன் மகளை ‘தங்க மீனாக’ வளர்க்க ஆசைப்படும் தந்தையின் கதையே இப்படமாக அமைந்திருந்தது. தங்க மீன்கள் கதை இயக்குநர் ராம் மற்றும் அவரது மகள் ஸ்ரீ சங்கர கோமதி ஆகியோரால் எழுதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
படத்தின் கதை
நிலையான வேலை, நிரந்தர வருமானம் இல்லாத கல்யாணி (ராம்), தன் அன்பு மகள் செல்லம்மாவை (சாதனா) தேவதையாக வளர்க்க ஆசைப்படுவார். செயல்வழி கற்றலில் ஆர்வம் கொண்ட செல்லம்மா பள்ளியில் ஆசிரியரால் மட்டம் தட்டப்படுகிறார். வீட்டில் மகளுக்கு ஃபீஸ் கட்டக்கூட வழி இல்லை என கல்யாணி அவமானப்படுத்தப்பட, இருவரும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள என்ன செய்கிறார்கள் என்பதே இப்படத்தின் அடிப்படை கதையாகும்.
நெகிழ வைத்த காட்சிகள்
அவமானப்படுத்தப்படும் இடத்தில் இயலாமையில் வெடிப்பதாகட்டும், பள்ளியில் மகளுக்காக சண்டை போடுவதாகட்டும், மகளுக்காக எந்த எல்லைக்கும் செல்வதாகட்டும் என ஒரு ‘அப்பா’வாக நடிப்பில் மிளிர்ந்தார் ராம். அதேசமயம் மழலை உச்சரிப்பு, தெத்துப்பல் சிரிப்பு என ரசிக்க வைத்தார் சாதனா. மேலும் எவிட்டா மிஸ், நித்யஸ்ரீயாக வரும் குழந்தை, ஷெல்லி கிஷோர் என ஒவ்வொருவரும் ஒரு ஒரு காட்சியில் நடிப்பில் அசத்தியிருந்தார்கள்.
பாராட்டைப் பெற்ற வசனங்கள்
இதைப் பணம் இல்லாதவங்க பார்க்காதீங்கன்னு விளம்பரம் போடும் போது போடுறாங்களா?, விளம்பரத்துல நாய் வந்ததுல இருந்து சிம்கார்டு வித்துச்சோ இல்லையோ, நாய் நல்லா விற்பனையாகுது, கிறிஸ்துமஸ் தாத்தா சொன்னா ஜீசஸ் கேப்பார்.ஹெட் மாஸ்டர் கேப்பாரா? என ஆங்காங்கே வசனங்களும் தங்க மீன்களை இன்னும் பாராட்டு மழையில் நனைய வைத்தன.
தேசிய விருது வென்ற படம்
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தங்க மீன்கள், “சிறந்த தமிழ் படம், சிறந்த பாடல், சிறந்த குழந்தை நட்சத்திரம்” ஆகிய 3 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. மேலும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், ஃபிலிம்பேர் விருது என ஏகப்பட்ட விருதுகளை தங்க மீன்கள் பெற்று ரசிகர்கள் மனதில் இன்றும் மின்னுகிறது.