இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் விஜய் அறிமுகமானாலும் தற்போது அவர் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு விஜய் மட்டுமே காரணம். ஆரம்ப காலங்களில் தனது தந்தை இயக்கத்தில் நடித்தாலும் காலம் செல்ல செல்ல விஜய் மற்ற இயக்குநர்களின் படத்திலும் நடித்தார்.
அப்படி ஃபாசிலின் காதலுக்கு மரியாதை, விக்ரமனின் பூவே உனக்காக என அவர் நடித்த படங்கள் அவருக்கு சாக்லேட் பாய் போன்ற இமேஜை உருவாக்கியது. ஒருகட்டத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவாக வேண்டுமென்ற விஜய்யின் எண்ணத்தை நிறைவேற்றியது திருமலை திரைப்படம்.
ரமணா இயக்கிய இப்படத்தில் விஜய்யின் கெட் அப்பும், அவரது நடிப்பும் கமர்ஷியல் எலிமெண்ட்டுக்குள் கொண்டு சேர்த்தது. மேலும் திருமலை படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்த அவரது ரசிகர்கள் விஜய்யின் அடுத்தக்கட்ட நகர்வை அப்படியே ஏற்றுக்கொண்டனர். அதனையடுத்து விஜய்யை வைத்து ஆதி படத்தை இயக்கினார் ரமணா. ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த் வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் திருமலை படத்தின் இயக்குநர் ரமணா விஜய்யோடு தனது அனுபவம் குறித்தும், தனது திரை பயணம் குறித்தும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், “ஒரு இரவு எனக்கு விஜய் ஃபோன் செய்தார். நான் அப்போது போதையில் இருந்தேன். ஃபோனை எடுத்து யார் நீ என்று கேட்டுவிட்டு ஃபோனை வைத்துவிட்டேன்.
வேறு யாராவது இருந்தால் நான் பேசிய தொனிக்கு மீண்டும் ஃபோன் செய்திருக்கமாட்டார்கள். விஜய் மீண்டும் ஃபோன் செய்து நீங்கள் ராதாமோகனின் நண்பர்தானே நான் நடிகர் விஜய் பேசுகிறேன் என்றார். அய்யோ மன்னித்துவிடுங்கள் என்றேன்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா நாளை உங்களிடம் கதை கேட்கலாம் என்று நினைத்தேன். இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் நாளை காலை நீங்கள் 7.30 மணிக்கு வர முடியுமா. அப்படி இல்லையென்றால் இன்னொரு நாள் பார்க்கலாம் என்றார்.
இல்லை சார் நான் வந்துடுறேன் என கூறி சென்றுவிட்டேன். விஜய்யின் அந்த தொலைபேசிக்கு பிறகு எனது வாழ்க்கையே திசை மாறியது. திருமலை கதையை 2.30 மணி நேரம் சொன்னேன். அதன் பிறகு கவிதாலயா நிறுவன தயாரிப்பில் விஜய் நடிக்கும் திருமலை படத்தின் இயக்குநர் என நான் அறிவிக்கப்பட்டேன்.
திருமலைக்கு முன்பு விஜய் சாக்லேட் பாயாக இருப்பார். அவரது முகத்தை மாற்ற முடிவு செய்து அவரது தாடியிலும், முடியிலும் மாற்றம் செய்ய தயங்கி தயங்கி நான் கேட்டேன். இந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை எல்லாம் நீங்கள் செய்யுங்கள். நான் கூடவே நிற்கிறேன் என்று கூறினார். நான் எவ்வளவு மாற்ற முடிவு செய்தாலும் அதை விஜய்தான் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றார்” என ரமணா கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்