தனுஷ் - அனிருத் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜூலை.30) நடைபெறுகிறது.


தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்த பிறகு ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் கடந்த சில மாதங்களாக இடைவெளியில் இருந்து வரும் நிலையில், இந்த விழாவில் ரஜினி குடும்பத்தைச் சேர்ந்த அனிருத்தும் தனுஷும் ஒரே மேடையில் இணைவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இந்நிலையில், முன்னதாக இவ்விழாவின் முன்னோட்டமாக சன் பிக்சர்ஸ் பகிர்ந்துள்ள பதிவில், ”2012இல் என் 20 வயதில் நான் ஒரு படத்துக்கு இசையமைப்பேன் என சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால், இசை தான் என் டிஎன்ஏ என ஒருத்தர் புரிய வைத்தார். டி (தனுஷ்) அண்ட் ஏ (அனிருத்) இந்த முறை ஜாலியா ஹேப்பியா வரோம். திருச்சிற்றம்பலம் ஆடியோ லான்ச்சில் சந்திப்போம்” என அனிருத் பேசியுள்ளார்.


 






’3’ படத்தில் தொடங்கியது முதல் கோலிவுட்டில் அனைவராலும் கொண்டாடப்படும்  தனுஷ் - அனிருத் காம்போ. தொடர்ந்து இவர்கள் வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன் ஆகிய படங்களில் இணைந்து வேலை பார்த்துள்ளனர்.


திருச்சிற்றம்பலம் படத்தை குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார்.  தனுசுடன் பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


 






முன்னதாக இப்படத்தின் மேகம் கருக்காதோ, தாய்க்கிழவி, லைஃப் ஆஃப் பழம் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.


இந்தப்படம் முழுக்க முழுக்க கிராமத்து படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியானது. வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.