உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக இருப்பது இந்தியா. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, இங்குதான் அதிக எண்ணிக்கையில் மக்கள்  வாக்களிக்கின்றனர். இந்தியா என்ற கருத்தாக்கத்தின் உயிர்நாடியாக கருதப்படும் ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக தேர்தல் கருதப்படுகிறது.


வாக்களிப்பது கட்டாயமாக்கப்படுமா?


ஆனால், இங்கு வாக்களிப்பது ஒன்றும் கட்டாயம் அல்ல. அவர்வர் விருப்பப்படி வாக்களிக்கலாம். இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கி உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. "ஒரு நபரை வாக்களிக்க கட்டாயப்படுத்த முடியாது. நாங்கள் சட்டமியற்றுபவர்கள் அல்ல. இதுபோன்ற வழிகாட்டுதல்களை எங்களால் நிறைவேற்ற முடியாது.


வாக்களிப்பதை கட்டாயமாக்கும் அரசியலமைப்பில் ஏதேனும் விதி உள்ளதா?" என டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் தெரிவித்தனர்.


மனுவை திரும்பபெறவில்லை என்றால் அபராதத்துடன் மனு தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள் எச்சரித்ததையடுத்து, மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞருமான அஷ்வினி குமார் உபாத்யாய், அதை வாபஸ் பெற்றார். 


பொதுநல வழக்கு:


முன்னதாக, அவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "வாக்குரிமையை கட்டாயமாக்குவது ஒவ்வொரு குடிமகனுக்குமான குரலை வலுப்படுத்தும். ஜனநாயகத்தின் தரத்தை மேம்படுத்தும். வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கும். குறைந்த வாக்குப்பதிவு ஒரு தொடர் பிரச்சனையாக இருந்து வருகிறது. கட்டாய வாக்களிக்கும் முறை விளிம்பு நிலை மக்களிடையே வாக்குப்பதிவை அதிகரிக்கும்.


வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் போது, ​​அரசாங்கத்தின் பொறுப்பு அதிகமாகும். மக்களின் நலன்களுக்காக அரசு செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. கட்டாய வாக்களிப்பு, வாக்களிப்பதை குடிமைக் கடமையாக ஆக்குவதன் மூலம் அரசியல் பங்கேற்பை ஊக்குவிக்கிறது. மேலும் வாக்களிப்பது கட்டாயமாக இருக்கும் போது, ​​மக்கள் அரசியலில் ஆர்வம் காட்டவும், ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடவும் வாய்ப்புகள் அதிகம்.


இந்தியாவில் குறிப்பிடத்தக்க பிரச்சனையாக இருக்கும் வாக்காளர் அக்கறையின்மையை போக்க இது உதவும். பல மக்கள் அரசியல் அமைப்பில் ஏமாற்றமடைந்துள்ளனர். தங்கள் வாக்குகள் கணக்கில் இல்லை என்று நினைக்கிறார்கள். கட்டாய வாக்களிப்பு ஜனநாயக செயல்பாட்டில் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவுகிறது. மக்கள் அரசியலில் அதிக ஈடுபாடு கொள்ள ஊக்குவிக்கும்" என குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது.


இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், "சென்னையில் இருக்கும் ஒருவரை, ஸ்ரீநகரில் உள்ள அவரது சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. அவரைப் பிடித்து ஸ்ரீநாகாவுக்கு அனுப்பும்படி போலீஸுக்கு நாங்கள் வழிகாட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்" என தெரிவித்தனர்.