1987-ல் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் 18 வயதில் நடிகையாக அறிமுகமானார் பிரபல நடிகை பானு ப்ரியாவின் தங்கையான சாந்தி ப்ரியா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்திப் படங்களில் நடித்த சாந்தி ப்ரியா, 1995-ல் பாஸிகர் படத்தில் நடித்த சித்தார்த் ரேவைத் திருமணம் செய்துகொண்டார். 2004-ல் சித்தார்த் மரணமடைந்தார். இரு மகன்கள் உள்ளதால் சொந்த வாழ்க்கையில் அதிகக் கவனம் செலுத்தினார் சாந்தி ப்ரியா. கடைசியாக 1994-ல் திரைப்படங்களில் நடித்தார். நடுவில் சில தொலைக்காட்சித் தொடர்களில் மட்டும் நடித்தார். இந்தியில் அக்ஷய் குமார் நடித்த முதல் படத்தில் இவர்தான் நாயகி. இந்தியில் பல திரைப்படங்கள் நடித்த இவர் இந்தி திரையுலகில் இருந்த நிற வெறி குறித்து ஒரு பேட்டியில் பேசி உள்ளார். 


எங்க ஊரு பாட்டுக்காரன்


தமிழ் சினிமாவில் நடிக்க வந்தது குறித்து பேசும்போது, "சம்மர் லீவுக்கு அக்கா நடிக்குற ஷூட்டிங்கிற்கு எல்லாம் கூட போய்டுவேன். அப்போது, கங்கை அமரன் பாத்துட்டு கேட்டார். நான் ஓகே சொல்லிட்டேன். அம்மா வேண்டாம்னு சொன்னாங்க. அப்புறம் அடம் பிடிச்சு நடிப்பேன்னு வந்தேன். டிகிரி முடிக்கணும்ன்னு சொன்னார். அப்போ ஸ்கூல் கூட முடிக்கல. ஆனா பிரைவேட்ல எழுதி பாஸ் பண்ணுவேன், ஒரே ஒரு படம் நடிச்சுட்டு வந்துடறேன்னு சொன்னே. ஆனா நடிக்க வந்ததுக்கு அப்புறம் எப்படி திரும்ப போக முடியும். கடைசி வரைக்கும் படிக்கவே இல்ல." என்றார். 



பெயர் உருவான விதம்


முதல் படத்தில் மட்டும் நிஷாந்தி என்ற பெயர், என்ன காரணம் என்று கேட்கையில், "எனக்கு ஒவ்வொரு நேரத்திலும் ஒவொரு பேர் உண்டு. முதலில் எனக்கும் என் அக்காவுக்கும் பேர் பானு மற்றும் சாந்தி மட்டும்தான். அக்காவுக்கு பாரதிராஜா சார் பானுவை பானுப்பிரியா என மாற்றி வைத்தார். நான் நடிக்கும்போது எனக்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் என்னும்போது, கங்கை அமரன், நிஷாந்தி என பெயர் வைத்தார். ஒரே ஒரு 'நி' சேர்த்தார். அந்த பெயரில் பெரிய விருப்பம் இல்லை என்றாலும், அந்த நேரத்தில் அவர் ஆசைக்கு விட்டு விட்டோம். ஆனால் அந்த பெயர் தரும் அர்த்தத்தை மனதில் கொண்டு வேறு பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக யோசித்தோம். அக்காவுக்கு ப்ரியா இருப்பதால், எனக்கும் வைத்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம் என அப்படி வைத்தார்கள். ஆனால் தெலுங்கில் ரேகா என்று வைத்திருந்தார்கள். அதனால் எனக்கு எல்லா இடங்களிலும் வேறு வேறு பெயர்கள்." எனக் கூறினார்.


நெபாட்டிசம்


இந்தியில் நடிக்கும்போது நெபாட்டிசம் போன்ற பிரச்சினைகள் அப்போது இருந்ததா என்று கேட்கும்போது, "நான் பானுப்ரியா தங்கை என்பதற்காக எந்த வாய்ப்பையும் பெறவில்லை. அப்போது அது போன்ற சூழ்நிலையும் இல்லை. அப்போதெல்லாம் திறமை மட்டுமே ஒரே வாய்ப்பு, நாம் முன்னேறுவதற்கு. அக்கா, தங்கை, அப்பா, அம்மா என்றெல்லாம் பார்த்து அப்போது சான்ஸ் கொடுத்தது இல்லை." என்று கூறினார். 



நிறவெறி


இந்தியில் ரேசிசம் இருந்ததா என்று கேட்டபோது, "கண்டிப்பாக, தென்னிந்தியாவில் இருந்து வந்தோம் என்று சொன்னால் நாம் கருப்பாக இருப்போம் என்று கூறுவார்கள். நம் நிறத்தால் நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்துள்ளேன். நிறைய இரவுகள் அழுதுள்ளேன். நார்த்தில் நிறவெறி உண்டு. அவர்களுக்கு மட்டுமா, நமக்கும் உண்டு… நம் ஊரில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் நார்த்தில் இருந்து வந்தவர்கள் தானே. நாமே அங்கிருந்து தானே எதிர்பார்க்கிறோம். இப்போ என் பையன் கூட ஸ்கூல்ல நிற வெறியால பாதிக்கப் பட்றான். அது மாறவே இல்ல." என்றார்.


நடிப்பை நிறுத்திய காரணம்


தமிழில் விஜயகாந்த், தெலுங்கில் நாகார்ஜூனா, இந்தியில் அக்ஷய் குமார் என அவர் நடித்த கடைசி படங்கள் அனைத்தும் பெரிய நடிகர்களுடன் ஆனது. எல்லா பெரிய நடிகரோடும் கடைசி திரைப்படம் நடித்துவிட்டு ஏன் நிறுத்தினீர்கள் என்ற கேள்விக்கு, "தமிழில் 1990 வரை நடித்தேன். அதன் பிறகு தெலுங்கில் நடித்தேன். பிறகு இந்திக்கு போனேன். எல்லாமே இரண்டு மூன்று வருட இடைவெளியில் மிக வேகமாக நடந்துவிட்டது. அப்போது தமிழில் நான் இந்தியில் இருக்கிறேன் என்று நினைத்துவிட்டார்கள், இந்தியில் நான் தமிழில் இருக்கிறேன் என்று நினைத்துவிட்டார்கள். அப்படியே நினைத்து நான் நடுவில் மாட்டிக்கொண்டேன். அப்படியே திருமணமும் ஆனதனால் நடிப்பை நிறுத்திவிட்டேன் என நினைத்து பலர் அணுகாமல் விட்டு விட்டனர்." என்று கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.