தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் ஆகிய இரண்டும் திரைப்படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதனை அடுத்து இவருக்கு இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி பட வாய்ப்புகளும் அதிகளவில் குவிந்து வருகின்றன. ஏற்கனவே முடித்த படங்கள் பல வெளியீட்டுக்கு காத்திருக்க மாமனிதன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
வில்லனாக விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் கமல், விஜய், ரஜினி ஆகிய மும்கியமான முன்னனி நடிகர்கள் அனைவருக்கும் வில்லனாக நடித்துவிட்டு அவர், தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் நடித்துவிட்டார். தற்போதெல்லாம் நடிகராக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் திரைப்படங்களில் அதிகம் பெயர் பெறுகிறார். சிவகார்த்திகேயனின் மாவீரனின் கூட அவர் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இவர் வில்லன் என்று இல்லாமல், 10 நிமிட ரோலாக இருந்தாலும் மறுக்காமல் நட்புக்காகவோ, கதைக்காகவோ செய்து கொடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார். பலர் சொல்வதுபோல இமேஜ் உடையும், அடிக்கடி பார்த்து போர் அடிக்கும் என்பது போலெல்லாம் இல்லாமல், அவர் நடித்த படங்கள் ஏராளம்.
96 திரைப்படம்
அப்படி அவர் நடித்த ஒரு படம்தான் 96. படத்தில் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பள்ளி பருவ கதை, அதில் ஸ்க்ரீன் ஸ்பேஸ் கிடையாது என்ற போதிலும் அவர் நடித்த திரைப்படம், தமிழ் மக்கள் அனைவரையும் தங்கள் பால்ய வாழ்வை நினைத்து சில மாதங்கள் உருக வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு பிறகு, தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா பள்ளி கல்லூரிகளிலும் குறைந்தது ஒரே ஒரு பேட்சாவது ரீயூனியன் செய்திருப்பார்கள் என்றால் மிகையாகாது. அந்த திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு அதுபோல ஒரு நிறைவேறாத பள்ளிக்காதல் இருந்ததாக ஒரு நிகழ்ச்சியில் கூறி உள்ளார்.
விஜய்சேதுபதியின் ’96’ காதல்
அதுகுறித்து பேசிய அவர், "நான் 'ஜானுமா'ன்னு ஒரு பொண்ண பாத்தேன். ஒரு நாலு வருஷம் அந்த பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்தேன். ஆனா அந்த பெண்ணுக்கு கடைசி வரைக்கும் தெரியாது. இப்பவும் தெரியாம இருக்கலாம். அதுக்கப்புறம் ரொம்ப நாள் அந்த பொன்ன பாக்கவே இல்ல. அப்புறம் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி, ஒரு நாள் நான் எங்க அப்பாவோட வண்டில போய்ட்டு இருக்கும்போது அந்த பொண்ணு மாதிரி ஒரு பொண்ணு போச்சு. நான் வண்டிய திருப்பினேன், ஏண்டா வண்டிய திருப்புறன்னு கேட்டாரு அப்பா. இல்லப்பா நான் 4 வருஷம் சைட் அடிச்ச பொண்ணு போகுதுன்னு நெனைக்குறேன், பாத்துட்டு போயிடலாம்ன்னு சொன்னேன். ஆனா திரும்ப பாக்க முடில. இப்போ நான் திரும்ப பாத்துட வேண்டாம்ன்னு நெனைக்குறேன். நான் எப்போ அத பத்தி நெனச்சாலும், அந்த பொண்ணு அப்டியே அந்த ஸ்கூல் யூனிபார்ம்ல வர்ற இமேஜ்தான் கண்ணுக்குள்ள வரும். அது ஒரு அழகான விஷயம். அந்த பழைய விஷயம் ரொம்ப அழகு. அது அப்படியே இருக்கட்டும்னு நெனைக்குறேன். அதை அழிக்க வேண்டாம்னு நெனைக்குறேன்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்