இப்போதெல்லாம் திரைப்படங்களுக்கு போட்டியாக ப்ரோமா, டீசர் என சீரியலே களத்தில் இறங்கிவிட்டன. சமூக வலைதளங்கள் மூலம் தினம் தினம் ப்ரோமோக்கள் போடப்படுகின்றன. சில சீரியலின் ப்ரோமோக்கள் மீம் கிரியேட்டர்களின் கையில் சிக்கி சின்னாபின்னாமாவதும் உண்டு. காமெடியாக கடந்து போகும் ப்ரோமோக்களில் நடுவே விஜய் டிவியின் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' என்ற சீரியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த ப்ரோமோவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
அந்த சீரியலில் ப்ரோமோ இப்படியாக தொடங்குகிறது. சீரியலின் நாயகி காரில் இறங்கி கோவிலுக்குள் வருகிறார். வெளிநாட்டில் இருந்து வந்தாலும் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை கடைபிடிப்பதாக நாயகியை பார்க்கும் வயதான பாட்டிகள் பாராட்டுகின்றனர். அதற்கு பதிலளிக்கும் நாயகி ''என்னதான் வெளிநாட்டில் படித்தாலும் நம்முடைய பாரம்பரியத்தை விட்டா கொடுக்க முடியும்'' என்கிறார். அந்த நேரத்தில் கோவிலுக்கும் நுழையும் நாயகன் காதலித்து திருமணம் செய்யும் ஒரு தம்பதியை மிரட்டி அந்த தாலியை கழட்டி வீசுகிறார். இதனைப்பார்த்து கோபமடைந்த நாயகி, ''இது காட்டுமிராண்டித்தனம். அம்மன் சாட்சியாக கட்டப்பட்ட தாலியை அறுக்க என்ன உரிமை இருக்கிறது'' என்கிறார். நாயகியின் செயலால் கோபமடைந்த நாயகன், அம்மன் கழுத்தில் கிடக்கும் தாலியை நாயகிக்கு போட்டு, நெற்றியில் பொட்டும் வைக்கிறார். ''இப்போது தாலிகட்டிவிட்டேன். அதற்காக நீ என் மனைவியா'' என்று கேட்டுவிட்டு நடையைக் கட்டுகிறார். அவரை நாயகி பின் தொடர்வதாக ப்ரோமோ முடிகிறது.
பெண்ணின் விருப்பமில்லாமல் கட்டாயத்திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு காட்சிப்படுத்தி இருக்கும் இந்த ப்ரோமோ ஏற்கத்தக்கதல்ல என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், ''
''கல்வி நிறுவனம், கோயில் அல்லது பிற வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிறுத்தம், சாலை, ரயில் நிலையம், சினிமா தியேட்டர், பூங்கா, கடற்கரை, திருவிழா நடைபெறும் இடம், பேருந்து, ரயில் போன்ற மக்கள் பயன்படுத்தும் பொதுப்போக்குவரது என எந்தப்பகுதியிலும் பெண்களுக்கு எதிரான குற்றமென்றால் 3 வருட சிறைத்தண்டனையும், 10ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள சிலர், ''திரைப்படமோ, சீரியலோ சமூகத்திற்கு நல்ல கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். இந்த குறிப்பிட்ட சீரியலின் ப்ரோமோவின் படி பார்த்தால் நாயகன் மீது நாயகி காவல்நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். நாயகன் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் தாலியை கழுத்தில் போட்டுவிட்டார் என்பதானாலேயே அவருடன் நாயகி சேர்ந்து வாழ யோசிப்பார் இப்படித்தான் கதை போகும். இது குற்றநடவடிக்கையை ஊக்குவிப்பது'' என பதிவிட்டுள்ளனர்.