அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் கைலாஷ் சத்யார்தி. இவர் குழந்தைகள் உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் நீண்ட காலமாக போராடி வருகிறார். அவர் குழந்தைகள் உரிமைகளுக்கான ஓர் விழிப்புணர்வு இயக்கமாக பச்சன் பச்சோ அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பையும் நடத்தி வருகிறார்.


இந்த அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2021ம் ஆண்டு வரை நாட்டில் கடத்தப்பட்ட 9 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டிருந்தனர்.  நாட்டிலே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 183 கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தெலுங்கானா மாநிலத்தில் 2 ஆயிரத்து 805 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் 593 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் 430 குழந்தைகளும், குஜராத்தில் 333 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.




கடந்தாண்டு கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, நாட்டில் குழந்தைகள் கடத்தல் அதிகரிக்கும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்களும், மத்திய உள்துறை அமைச்சகமும் எச்சரித்திருந்தன. ஊரடங்கினால் மூடப்பட்டு நஷ்டத்தில் இயங்கிவந்த ஆலைகள் மீண்டும் லாபத்தில் இயங்குவதற்காக குறைந்த ஊதியத்திற்கு குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்தும் அபாயம் இருந்த காரணத்தால் மத்திய உள்துறை அமைச்சகமும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.


தேசிய குற்றப்பதிவு ஆவண புள்ளிவிவரப்படி, 2019ம் ஆண்டு மொத்தம் 6 ஆயிரத்து 616 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இது 2018ம் ஆண்டைக் காட்டிலும் 2.8 சதவீதம் அதிகமாகும். இந்த குழந்தைகள் பெரும்பாலும் பேருந்து போக்குவரத்து மூலமாக கடத்தப்படுகிறது. குறிப்பாக, கடந்தாண்டு ஆகஸ்டு முதல் அக்டோபர் காலங்கள் வரையில் குழந்தைகள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாமல் பயணிப்பது அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் காலங்கள் இடையே மட்டும் கடத்தப்பட்ட 400 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 100 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




பள்ளிகள் செயல்படாத காரணத்தாலும், பொருளாதார சூழல் காரணமாகவும் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடைநிற்கின்றனர் என்றும், அதனால் இடைநிற்கும் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், குழந்தை தொழிலாளர்ளுக்கு எதிரான முகாம் ஆய்வின்படி, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டு மீட்கப்பட்டிருப்பது என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், இதுபோன்று குழந்தைகளை சட்டவிரோதமாக தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.