‘திருச்சிற்றம்பலம்’ படத்தை பார்த்த ரசிகர்கள் திரையரங்க திரையை கிழித்தது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.


 




நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திருச்சிற்றம்பலம் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ரோகிணி தியேட்டரில், பெரும்பாலான பிரபலங்கள் அவர்கள் நடித்த படத்தை பார்க்க செல்வது வழக்கம். அதுவும் முதல் நாள் முதல் ஷோவிற்கு செல்வது நடந்து வரும் விஷயம். 


நேற்றிலிருந்து தனுஷ் ரசிகர்கள், அவர் ரோகிணி தியேட்டருக்கு வருவார் என எதிர்ப்பார்த்திருந்தனர். அதற்கு ஏற்றது போல், நடிகர் தனுஷ் அனிருத், நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் உடன் முதல் காட்சி பார்க்க அந்த தியேட்டருக்கு வந்தனர். 


 






தனுஷை பார்த்து ஆர்வம் அடைந்த ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டனர். என்ன செய்வது என்று திகைத்த  நடிகர் தனுஷ் ராஷி கண்ணாவின் கைகளை பிடித்து கொண்ட வண்ணம் அங்கிருந்து கிடு கிடுவென ஓடி காரில் போய் அமர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 


 






ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் நடிகர் தனுஷ் நடித்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதால், அதை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் வந்திருந்தனர். வந்த இடத்தில் இரட்டை போனஸாக, நடிகர் தனுஷ் நேரடியாக வந்ததும், அவரை கண்டதும் ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆரவாரம் செய்ததும், கண்ணுக்கு இனிமையான காட்சியாக இருந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் திருச்சிற்றம்பலம் படத்தின் 2 ஆவது காட்சியை ரோகிணி திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் சிலர் திரையை கிழித்ததாக தெரிகிறது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 






சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஜவஹர் மித்ரன் இயக்கியுள்ளார். நித்யா மேனன் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடித்துள்ள நிலையில் , பாடல்கள் அனைத்தும்  ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்களிடம் படம் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. தொடர்ந்து படம் தொடர்பான ப்ரொமோ பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தான், திருச்சிற்றம்பலம் இன்று வெளியாகியுள்ளது.