அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்த தண்ணீரின் அளவும் குறைந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணை மற்றும் புதிய பாசன வாய்க்காலில் இருந்து, கடந்த ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. பின், கேரள மாநிலம் உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை குறைந்ததால், அமராவதி அணைக்கு எதிர்பார்த்த அளவில் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்த நிலையில், ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு, 6,000 கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது.




காலை 6:00 மணிக்கு அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து, 1,175 கன அடியாக குறைந்தது. இதனால், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 350 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. ஆற்றில் தொடர்ந்து, 800 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் ஷட்டர்கள் மூலம், 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 88.06 அடியாக இருந்தது. கடந்த, 15 நாட்களாக திறக்கப்பட்ட தண்ணீர் மூலம், கரூர் மாவட்ட பாசன பகுதிகளில் நெல் உள்ளிட்ட சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. அணை நீர்மட்டம், 80 அடியை தாண்டிய நிலையில் உள்ளதால் மீண்டும், 10 நாட்களுக்குப் பின், அமராவதி அணையில் இருந்து, கூடுதல் தண்ணீர் ஆற்றில் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.




அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், ஆற்றில் வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால், கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 686 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. மேலும், நகரப் பகுதியான திருமாநிலையூர் பகுதியில் அமராவதி ஆற்றின் கரையோரத்தில் மட்டும், தண்ணீர் சென்றது.


மாயனூர் கதவணைக்கு 26 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து சரிவு


கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து, 26 ஆயிரம் கன அடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 26 ஆயிரத்து, 866 கன அடி தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதி குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 25 ஆயிரத்து, 746 கன அடி தண்ணீரும், பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.




திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.66 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.




கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 215 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.40 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண