இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் கனடாவில் உள்ள தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  






பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் நாளை (செப்டம்பர் 30 ஆம் தேதி) ரிலீசாகவுள்ளது.  எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுக்கள் தான் காணப்படுகிறது. இதனிடையே படக்குழுவினர் கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். 


தமிழ் சினிமாவின் 50 வருட கனவு நாளை நனவாகப் போவதை எண்ணி ஒவ்வொரு ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் அங்கு வாழும் தமிழர்களும், தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட பிற நாட்டவர்களும் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் கனடாவில் உள்ள தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 






அங்கு நீண்ட காலமாகவே தமிழ் திரைப்படங்கள் வெளியாவதில் உள்ளூர் அமைப்புகளால் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக கனடாவின் ஹாமில்டன், கிச்சனர் மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடத் தயாராகி வரும் நிலையில்,ஆன்லைன் வழியாக மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விநியோகஸ்தரான KW டாக்கீஸ் இதனை பகிர்ந்துள்ளார்.


அதில், பொன்னியின் செல்வன் படத்தை திரையிட்டால் ஸ்கிரீனை கிழிப்பதோடு மட்டுமல்லாமல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். நாங்கள் இந்திய படங்களை மட்டுமல்லாமல் ஆங்கில படங்களையும் விட்டு வைப்பதாக இல்லை. இந்த படம் மட்டுமல்லாமல் KW டாக்கீஸ் மூலம் விநியோகம் செய்யப்படும் திரைப்படங்களையும் குறி வைத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி கனடாவில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.