தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ், விசிக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 


தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. 


ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்  கொள்வதாக தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22ஆம் தேதி சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.






திருவள்ளூர் மாவட்டத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தமிழக உள்துறை செயலாளர் டி ஜி பி மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஆர் எஸ் எஸ் அணி வகுப்புக்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறி  ஆர் எஸ் எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.


நீதிபதி இளந்திரையன் முன் ஆஜரான ஆர் எஸ் எஸ் தரப்பு  வழக்கறிஞர்கள், கடந்த 22 ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மற்ற கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும் நிலையில், தங்கள் அணிவகுப்பு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.


மேலும், அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், அதுபோல எந்த மனுவும் இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்தனர். இதை கேட்ட நீதிபதி இளந்திரையன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிலாக தமிழக அரசின் நிராகரித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினார். ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதை அடுத்து, வழக்கை தாக்கல் செய்து எண்ணிடும் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.