புஷ்பா 2
அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகியது. தெலுங்கு , தமிழ் , மலையாளம் , இந்தி , என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது இப்படம். இதுவரை நான்கு நாட்களில் உலகளவில் ரூ 829 கோடி இப்படம் வசூலித்துள்ளது. கேரளாவில் புஷ்பா 2 படத்தின் திரையிடலின் போது நடந்த குளறுபடி தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பாதியில் படம் பார்த்த ரசிகர்கள்
கேரளா கொச்சியில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றில் புஷ்பா 2 திரைப்படம் மாலை ஆறு மணி காட்சி திரையிடப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக படத்தை இரண்டாம் பாதியில் இருந்து திரையிடப்பட்டுள்ளது. டைட்டில் கார்ட் எதுவுமே இல்லாமல் நேரடியாக கதை தொடங்கிவிட்டார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக படம் பார்த்துள்ளார்கள். படம் முடியும் போது எண்ட் கார்ட் போடும் போதுதான் ரசிகர்களுக்கு தாங்கள் படத்தை பாதியில் இருந்து பாத்திருக்கிறோம் என்று தெரிந்திருக்கிறது. உடனே திரையரங்க நிர்வாகத்திடம் ரசிகர்கள் முறையிட்டனர். இதில் சில ரசிகர்கள் தங்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும்படியும் சிலர் தங்களுக்கு முதல் பாகத்தை திரையிடச் சொல்லியும் கேட்டுள்ளார்கள். குறிப்பிட்ட சில ரசிகர்களுக்கு மட்டும் படத்தை முதலில் இருந்து திரையரங்கம் திரையிட்டு மற்ற ரசிகர்களுக்கு பணத்தை திருப்பி அளிப்பதாக உத்தரவாதம் அளித்தது.
இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. புஷ்பா 2 படத்தின் நீளமே மூன்றரை மணி நேரம் என்பதால் இரணாம் பாதியில் இருந்து பார்த்தாலும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னொரு தரப்பினர் பாதியில் இருந்து ஓடுவது கூட தெரியாமல் இது ஏதோ நான் லீனியர் கதை சொல்லல் என நினைத்து கேரள ரசிகர்கள் படம் பார்த்துள்ளார்கள். உங்கள் சினிமா ரசனைக்கு ஒரு அளவு இல்லையா என மற்றொரு தரப்பினர் நக்கலடித்து வருகிறார்கள்.