இந்தி நடிகை சுஷ்மிதா சென் திருநங்கையாக நடிக்கும் வெப் தொடர் ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ள நிலையில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 


1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், 1997ம் ஆண்டு நாகர்ஜூனா நடிப்பில் வெளிவந்த ரட்சகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்த இவர் பாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். 47 வயதாகும் இவர் தொடர்ந்து பாலிவுட்டில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். 


அந்த வகையில், சுஷ்மிதா சென் தாலி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் திருநங்கையாக சுஷ்மிதா சென் நடித்திருப்பது தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கும் தாலி வெப் தொடரில் மும்பையை சேர்ந்த திருநங்கையாக சுஷ்மிதா சென் நடித்துள்ளார். சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் ஸ்ரீகவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை உண்மை கதையாக கொண்டு எடுக்கப்பட்ட வெப் தொடர் ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளது. ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெப் தொடர் ரிலீசாவதை ஒட்டி நேற்று டீசர் வெளியாகி உள்ளது.






சுஷ்மிஷாவின் குரல் தொடங்கும் தாலி வெப் தொடரின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தாலி வெப் தொடர் குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட சுஷ்மிதா சென், ’ஒதுக்கி வைக்கப்பட்டதில் இருந்து பாராட்டி கைத்தட்டிய தருணம் வரையிலான கதை இது’ என குறிப்பிட்டுள்ளார். இதுவரை நடிகர்கள் மட்டுமே திருநங்கையாக நடித்து வந்த நிலையில் முன்னணி நடிகையாக இருக்கும் சுஷ்மிதா சென் திருநங்கை கேரக்டரில் நடிப்பது வரவேற்பை பெற்றுள்ளது. 


40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாத சுஷ்மிதா சென் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.