இந்திய திரையுலகிற்கு இந்தாண்டு இதுவரை சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழ் திரையுலகம் மிகப்பெரிய அளவிலான தோல்விகள் ஏதுமின்றி வெற்றிகரமான ஆண்டாகவே இதுவரை அமைந்துள்ளது. துணிவு, வாரிசு என வெற்றிகரமாக பொங்கலுடன் தொடங்கிய கோலிவுட்டிற்கு இதுவரை ஓரளவு நல்ல வசூலை தந்த படங்களே வெளியீடாக அமைந்துள்ளது.


வேறு மொழிகளில் தயாராகி தமிழில் வெளியான படங்களும் நல்ல வசூலையே இதுவரை பெற்றுத்தந்துள்ளது. மேலும், இந்தாண்டு நிறைவு பெற இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில்  வரப்போகும் 5 மாதங்களுமே தமிழ் திரையுலகிற்கு கொண்டாட்டமாக அமைய உள்ளது.


ரஜினிகாந்த், விஜய், தனுஷ், ஜெயம் ரவி, விஷால், கார்த்தி, ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களுடன் ஷாரூக்கான், பிரபாஸ், துல்கர்சல்மான் படங்களும் அடுத்தடுத்து வெளியாகப் போகிறது.


ஆகஸ்ட்:


இந்திய திரையுலகின் உச்சநட்சத்திரமும், சூப்பர்ஸ்டாருமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர். படத்தின் பாடல்கள் பட்டி, தொட்டியெங்கும் ரஜினியின் பழைய வைப்பை ஏற்ற படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த படம் வரும் 10-ந் தேதி வெளியாக உள்ளது.


அதேபோல, பிரபல இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் ஜெயம்ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் படம் வரும் ஆகஸ்ட் 25-ந் தேதி ரிலீசாக உள்ளது. அதே நாளில், துல்கர் சல்மானின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கிங் ஆஃப் கோதா படமும் வெளியாக உள்ளது.


செப்டம்பர்:


விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பெரிய விழாக்கோலம் அடங்கிய செப்டம்பர் மாதமே இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் மாதமாக அமைந்துள்ளது. இந்திய திரையுலகின் உச்சநட்சத்திரமாக பாலிவுட் பாதுஷாவாக உலா வரும் ஷாரூக்கானின் ஜவான் வரும் செப்டம்பர் 7-ந் தேதி ரிலீசாக உள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடன் நயன்தாரா, விஜய்சேதுபதியும் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 19-ந் தேதி விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படம் ரிலீசாக உள்ளது. டைம் டிராவலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதே தேதியில் தமிழ்நாட்டில் வசூலில் மாபெரும் சாதனை படைத்த ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தின் தொடர்ச்சியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படமும் ரிலீசாக உள்ளது.


கே.ஜி.எஃப். படம் மூலமாக இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் சலார். இந்த படம் வரும் செப்டம்பர் 28-ந் தேதி வெளியாக உள்ளது. செப்டம்பர் மாதம் வெளியாகும் ஜவான் மற்றும் சலார் படங்கள் இந்தியா முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அக்டோபர்:


தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ. விஜய்யுடன் சஞ்சய்தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், திரிஷா, மன்சூர் அலிகான் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதாலும், எல்.சி.யூ. சீரிசாக இந்த படம் வரும் என்பதாலும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை லியோ பெற்றுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாகிறது.


நவம்பர்:


பொங்கலை போலவே தமிழ்நாட்டில் கோலாகலமான பண்டிகை தீபாவளி ஆகும். இந்த தீபாவளி வரும் நவம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான நட்சத்திர படங்கள் வெளியாக உள்ளது.


சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள அயலான் படம் தீபாவளி விருந்தாக நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. அதேபோல மற்றொரு நட்சத்திர நடிகரான கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் வரும் நவம்பர் மாதம் தீபாவளி விருந்தாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கார்த்திக் சுப்பராஜூன் மாஸ்ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படம் வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.


டிசம்பர்:


தமிழின் முக்கிய நடிகராக உலா வருபர் தனுஷ். தனது அபாரமான நடிப்பால் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் கேப்டன் மில்லர். ஆங்கிலேய காலத்தில் நடக்கும் கதைக்களத்துடன் ரத்தமும், சதையுமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.


மொத்தத்தில் இந்தாண்டின் எஞ்சியுள்ள 5 மாதங்களும் ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக ஒவ்வொரு மாதமும் ஆரவாரமாக திரையரங்கில் திருவிழா போல அமையப்போகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மேலும், சில முக்கிய நடிகர்களின் திரைப்படங்களும், ஹாலிவுட் படங்களும் வரும் மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.