Rajinikanth:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம், அதாவது, ஜூலை 28ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படமாக “ஜெயிலர்” படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படம் குறித்தும் இப்படத்தில் தனது அனுபவம் குறித்தும் பேசினார். அதில், காவாலா பாடல் உருவாக்கம் குறித்து அவர் பேசியது அனைவரது மத்தியிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், “காவாலா பாடலுக்காக பிரமாண்டமான முறையில் செட் போடப்பட்டது. செட் போடுவதற்கே 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. பாடல் மொத்தம் 6 நாட்கள் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் நான் லால் சலாம் படத்தில் நடிக்கவேண்டி இருந்தது. ஆனால், ஜெயிலர் படத்திற்கு ஏற்றவாறு தாடி வைத்திருந்ததால், பாடல் சூட்டிங்கை முடித்துவிட்டு போய்க்கொள்ளலாம் என காத்திருந்தேன்.






பாடல் படமாக்க திட்டமிட்ட நாள் வந்த போது எனக்கு அழைப்பு வரவில்லை. இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் ஆனது எனக்கு அழைப்பு வரவில்லை. உடனே உதவியாளரை அழைத்து நெல்சனிடம் கேட்கச் சொன்னதற்கு, நெல்சன்.. ”பிரேம் பாருங்க ஜி’’ என கூறியுள்ளார். இறுதியாக 6வது நாள் என்னை அழைத்தார்கள். அதுவும் மதிய உணவுக்குப் பின்னர் வரச்சொன்னார்கள். நானும் போய் ஆவலுடன் காத்திருந்தேன். டீ ப்ரேக்கிற்கு பின்னர் என்னை மேக் - அப் போடச் சொன்னார்கள். நானும் நமக்கு இருக்கும் ஒரே பாடல் என பில்டப் எல்லாம் கொடுக்கப்பட்டிருந்ததால் நானும் ரிகர்சல் எல்லாம் எடுத்து தயாராக இருந்தேன்.


நெல்சன் அழைத்ததும் செட்டிற்குள் சென்றேன், செட் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் இருந்தார். தமன்னாவுடன் எனக்கு ஒரு மூவ்மெண்ட் இருந்தது. அடுத்த மூவ்மெண்ட் தமன்னா இல்லாமல் காட்சிபடுத்தப்பட்டது. தமன்னாவுடன் பேசக்கூட இல்லை, அதற்குள் அவ்வளவுதான் சார் உங்க போர்ஷன்  முடிந்துவிட்டது என்றார்கள்” இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதும் ஒட்டுமொத்த நேரு ஸ்டேடியமும் சிரிப்பலையில் மூழ்கியது. இதனை வீடியோ எடுத்த ரசிகர், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.