தி சப்ஸ்டன்ஸ்
உலக சினிமா ரசிகர்களின் மத்தியில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் 'The Substance'. ஃபிரெஞ்சு இயக்குநர் கோராலி ஃபார்கீட் இயக்கியிருக்கும் இப்படத்தில் டெமி மூர் மற்றும் மார்கரட் குவாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் . சர்வதேச திரையரங்குகளில் வெளியாகி தற்போது இந்திய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
எலிஸபெத் ஸ்பாகிள் என்கிற நடிகை புகழின் உச்சத்திற்கு சென்று பின் காலப்போக்கில் மக்களால் மறக்கப்படுகிறார். தொலைக்காட்சியில் ஃபிட்னஸ் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் எலிஸபெத் தனக்கு வயதாகிவிட்டதால் வேறு ஒரு மாடலை சேனல் தேடி வருவதை தெரிந்துகொள்கிறார். இப்படியான நிலையில் தான் தி சப்ஸன்ஸ் பற்றி அவருக்கு தெரிய வருகிறது. இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் தனது இளமை உருவத்தை எலிஸபெத் மீண்டும் பெறலாம். ஆனால் அவர் ஒரு வாரம் காலம் இளமையான உடலிலும் இன்னொரு வாரம் வயதான உடலோடும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக வைக்கப்படுகிறது. இளமையில் கச்சிதமான உடலோடும் அழகோடு இருக்கும் எலிஸ்பெத் மீண்டும் புகழ்ச்சியின் போதையை அனுபவிக்கிறார். மறுபக்கம் இன்னொரு வாரம் வயதான தனது உடலோடு என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார். ஒவ்வொரு முறை தனது இளமை உருவத்திற்கு திரும்பும்போது தனது வயோதிக உடலை எலிஸபெத் வெறுக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கே எதிராக அவரது செயல்கள் மாறுகின்றன.
பொழுதுபோக்குத் துறை பெண்களின் உடல்மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் மிகை கற்பிதங்களை பற்றிய அரசியலை மிக ரத்தமும் சதையுமாக பேசுகிறது தி சப்ஸ்டன்ஸ் படம். ரத்தமும் சதையும் என்றால் வெறும் உவமைக்காக சொல்லவில்லை. பெண்களின் உடல் மீதும் அழகைப் பற்றி என்னவெல்லாம் பொதுவரையறைகள் சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதை எல்லாம் வெறுக்கும் அளவிற்கு கோரமான உடல் சித்தரிப்புகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. மனவலிமை குறைவானவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அதே நேரம் இதே குழந்தைகள் பார்க்க உகந்த படம். இல்லை.
தி சப்ஸ்டன்ஸ் படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள அதிகப்படியான வரவேற்பு காரணமாக முபி ஓடிடி தளம் இந்த படத்தை ஒரு வார காலத்திற்கு இலவசமாக பார்க்க வழங்கியுள்ளது.