கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் பாபி தியோல் திஷா பதானி , யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் , ஆங்கிலம், உள்ளிட்ட 6 மொழிகளில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. தற்போது படத்தின் ப்ரோமோஷான் பணிகள் படுதீவிரமாக நடந்து வருகின்றன.
கங்குவா சிறப்பு காட்சிகள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யா படம் திரையரங்குகளில் வெளியாகாத காரணத்தினால் ரசிகர்கள் கங்குவா படத்தை பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான ஒர் வரலாற்று கதையில் இரட்டை வேடத்தில் சூர்யாவை பார்ப்பது என்பது ரசிகர்களின் கனவு நிறைவேறியது போல. குறிப்பாக இந்த ஆண்டு இந்தியன் 2 , தி கோட் , தங்கலான் , வேட்டையன் என எல்லா ஸ்டார்களின் படங்களும் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் வசூலில் 1000 கோடி சாதனை படைக்கும் என ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த படமும் எதிர்பார்த்த அவ்வளவு பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை. இதனால் ஒட்டுமொத்த திரையுலகின் கவனமும் தற்போது கங்குவா படத்தின் மீது விழுந்துள்ளது. குறிப்பாக படத்தின் ப்ரோமோஷனின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த படம் 2000 கோடி வசூல் ஈட்டும் என சொன்னது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைப்பதும் , ரசிகர்களின் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றால் மட்டும் இந்த வசூல் இலக்கி சாத்தியமானது . அந்த வகையில் தற்போது கங்குவா படத்தின் சிறப்பு காட்சிகள் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆந்திரா , கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கங்குவா படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி கேட்டுள்ளதாகவும் இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்றும் படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.