எனது மகன், எனது திரையுலக சிஷ்யன் சிம்பு சினிமாவில் வல்லவன், நிஜத்தில் நல்லவன் சிம்புக்காகத்தான் எல்லாம் என டி. ராஜேந்திரன் பேசியுள்ளார்.
உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்திரன் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளர். அதற்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எனது மகன், எனது திரையுலக சிஷ்யன் சிம்பு சினிமாவில் வல்லவன், நிஜத்தில் நல்லவன் சிம்புக்காகத்தான் எல்லாம் என டி. ராஜேந்திரன் பேசியுள்ளார்.
மேலும் சிம்பு குறித்து அவர் பேசியது:
இந்த கலியுகத்தில் பெற்றோர்களை வீட்டிலிருந்து வெளியேற்றும், ஆசிரமத்தில் சேர்த்து விடும் பிள்ளைகள் தான் அதிகம். ஆனால் எனது மகன் சிம்பு, தனது ரசிகர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளார். இதை நினைத்துப் பார்க்கையில்,
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டத் தாய்” - என்ற
திருவள்ளுவரின், திருக்குறள் தான் நினைவுக்கு வருகிறது. எனது மகன் நான் பெற்றெடுத்த மன்மதன் மட்டுமல்ல நல்ல மனம் பெற்றவன் என்று சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தனது ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பினை தள்ளி வைத்து விட்டும், ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் பாடல் வெளியீட்டினை தள்ளி வைத்துவிட்டும் எனக்காக கடந்த பத்து, பனிரெண்டு நாட்களாக அமெரிக்காவில் அலைந்து திரிந்து கொண்டு இருக்கும், எனது மகன் சிம்புவை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது மகன், எனது திரையுலக சிஷ்யன் சிம்பு சினிமாவில் வல்லவன், நிஜத்தில் நல்லவன் சிம்புக்காகத்தான் எல்லாம். இவ்வாறு டி.ராஜேந்திரன் பேசும்போது அழுது விட்டார். உடனே அருகில் இருந்த அவரது மனைவி அவரது கண்ணீரை துடைத்து விட்டார். அமெரிக்கா சென்றுவிட்டு நலமுடன் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையினை ரசிகர்களாகிய உங்களின் பிராத்தனையும், அன்பும் எனக்கு கொடுத்திருக்கிறது.
அனைவருக்கும் நன்றி
மேலும், எனக்கு உடல் நலக் குறைவு என்றவுடன் பிரார்த்தனை செய்த அனைத்து திரையுல ரசிகர்களுக்கும், சிம்பு ரசிகர்களுக்கும், எனது கட்சிக்காரர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், அவர்களின் அன்பிற்கும் நன்றி. என்னை மருத்துவமனையில் சந்தித்த எனது அரசியல் ஆசான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் புதல்வரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த நம்பிக்கைக்கு நன்றி. எனது திரையுலக நண்பர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் நன்றி. மேலும் உங்களின் பிராத்தனையாலும் இறைவனின் அருளாலும் நான் பேசுகிறேன். எனக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை, எனது ரசிகர்கள், நண்பர்கள், ஈழத்து உறவுகள் அனைவருக்கும் எனது நன்றி எனத் தெரிவித்தார்.