இந்திய சினிமாவை பொறுத்தவரையில் ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு  வந்தது. ஆனால் அந்த ட்ரெண்டை மாற்றி தற்போது ஹீரோக்களுக்கு நிகராக வில்லன் கதாபாத்திரங்களை மாஸாக வடிவமைக்கிறார்கள். எந்தெந்த படங்களில் எல்லாம் வில்லன் கதாபாத்திரங்கள் வெகு சிறப்பாக இருக்கிறதோ நிச்சயம் அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும். 


வில்லன்கள் மட்டுமே பயன்படுத்தாமல் பல ஆக்ரோஷமான வில்லிகளை பயன்படுத்திய பல படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. சாஃப்ட் கதாபாத்திரங்கள் மட்டுமே நடிகைகளால் செய்ய முடியும் என்ற இமேஜை உடைத்து ரஃப் அண்ட் டஃப்  கேரக்டர்களிலும் எங்களால் நடிக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.  அப்படி தமிழ் சினிமாவின் வில்லிகளாக பரிணாமம் எடுத்த சில நடிகைகளை பற்றிய ஒரு தொகுப்பு :




நீலாம்பரி - ரம்யா கிருஷ்ணன் :


பல தமிழ் படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்கும் நடிகைகளை பார்த்து இருப்போம். ஆனால் படம் முழுக்க ஒரே வில்லியாக ட்ராவல் செய்த ஒரு கேரக்டர் என்றால் அது படையப்பா படத்தில் நீலாம்பரி மட்டும் தான். அவர் தான் வில்லி ட்ரெண்ட் செட் செய்தவர். ரஜினிகாந்துக்கு நிகரான ஒரு கதாபாத்திரமாக மிகவும் ஸ்டைலான வன்மம் கொண்ட வில்லியாக வெகு சிறப்பாக நடித்திருப்பார். நீலாம்பரி கதாபாத்திரத்தால் தான் அப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றும் சொல்லலாம். 


ருத்ரா - திரிஷா :


தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' படத்தில் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய காதலன் தனுஷ் அதற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக கொலை செய்யும் அளவுக்கு துணியும் ஒரு பங்கமான வில்லியாக படம் முழுக்க நடித்து இருப்பார். முதல் முறையாக திரிஷாவை ஒரு நெகட்டிவ் கேரக்டரில் பார்த்தது ரசிகர்களுக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. 


 



பேச்சி - வரலக்ஷ்மி 


'சண்டக்கோழி 2' படத்தில் பழிவாங்க வேண்டும் என்பதையே நோக்கமாக  கொண்ட பயங்கரமான வில்லியாக வரலக்ஷ்மி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 


ஈஸ்வரி - ஸ்ரேயா ரெட்டி :


'திமிரு' படத்தில் திமிரான ஒரு நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரேயா ரெட்டியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. ரவுடித்தனம் செய்த ஸ்ரேயா ரெட்டியின் புடவையை விஷால் உருவியதால் அவன் தான் என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என விடாப்பிடியாக அவனை அடைய வேண்டும் என்பதற்காக வில்லத்தனமான நடித்திருந்தார். ஸ்ரேயா ரெட்டி இடம்பெறும் காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது. 


 



கீதா - ரீமா சென் :


வல்லவன் படத்தில் பள்ளி காலத்தில் சிம்பு மீது இருக்கும் அதீத காதலால் அவரை எவ்வளவு கொடுமைப்படுத்த முடியுமோ அவ்வளவு கொடுமை படுத்தி வைக்கும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருந்தார் ரீமா சென். ஸ்கூல் போகும் ஒரு பெண்ணாக இவ்வளவு வில்லத்தனத்தை வெளிப்படுத்தமுடியுமா என அனைவரையும் கவர்ந்தார். 


நந்தினி - ஐஸ்வர்யா ராய் :


'பொன்னியின் செல்வன்' படத்தில் அழகான வில்லியாக சோழ தேசத்தை எப்படியாவது அழித்தே தீர வேண்டும் என வெறித்தனமான ஒரு வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் நந்தினி கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் வெறித்தனமான நோக்கத்தை கண்களாலேயே காட்டி இருப்பார் ஐஸ்வர்யா ராய். 


 



பீடா பாண்டியம்மா - சங்கீதா :


தம்பிக்கோட்டை படத்தில் பூனம் பஜ்வாவின் வில்லத்தனமான அக்காவாக பிச்சு உதறி இருப்பார் நடிகை சங்கீதா. அவரின் அடாவடியாக பேச்சு, பாடி லாங்குவேஜ் எல்லாம் அசத்தலாக கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போனது. பஜாரி கேரக்டருக்கு ஏற்ற மாதிரி மிரட்டலாக அவர் நடித்தது பெரிய அளவில் பேசப்பட்டது.