காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படம் வெள்ளிக்கிழமை வெளியாகியது. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். காஷ்மீர் பண்டிட்களின் துயரத்தை கூறும் இப்படத்திற்கு வரி விலக்கு வேண்டி பாஜகவினரால் பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்கு பாஜக ஆளும் ஹரியாணா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசும் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு எழும் ஆதரவுக்கு மத்தியில் எதிர்ப்புக் குரல்களும் எழத் தொடங்கியுள்ளன.



இப்படம் இஸ்லாமிய வெறுப்பை சாமானிய மக்களிடத்தில் ஏற்படுத்தும் விதமகாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக, காஷ்மீர் பண்டிட்களுக்கு என்ன செய்தது என்றும் ட்விட்டரில் சில விமர்சனங்களை கவனிக்க முடிந்தது. வசூல் அடிப்படையில், முதல் நாளில் ரூ 3.55 கோடி வசூலித்த இப்படம், முதல் திங்கட்கிழமை ரூ 15 கோடி வசூல் செய்து, செவ்வாய்கிழமை ரூ 17 முதல் 18 கோடி வரை வசூல் செய்து, முதல் மூன்று நாள் வசூலாக ரூ. 60 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இந்த இரட்டை இலக்க எண்ணிக்கை, கொரோனாவுக்கு பிறகு வெளியான பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இந்த திரைப்படத்திற்காக தியேட்டர் வருகை எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை காணமுடிகிறது. இன்னும் போகப்போக நாளுக்கு 20 கோடி வீதம் வருவாய் வரும் என்று கணக்கிடுகின்றனர்.










திரைப்படம் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளதால், அதிகமான மக்கள் படத்தை ஆர்வத்துடன் காண வருவதாக தெரிவிக்கின்றனர். அது போல தியேட்டர்களின் எண்ணிக்கையும் உயர்வதாக கூறப்படுகிறது. முதல் நாளான ஞாயிற்றுகிழமை 600 தியேட்டர்களில் வெளியான இந்த திரைப்படம், இரண்டாவது நாள் 2000 தியேட்டர்களாக உயர்ந்தது. மூன்றாவது நாள், 2500 திராயரங்குகளாக உயர்ந்தது. இந்த படத்தின் ஒட்டுமொத்த கலெக்ஷன் 200 கோடியை தாண்டும், என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ராதே ஷ்யாம் திரைப்படத்தை வீழ்த்தி வேகமாக சென்றுகொண்டிருக்கும் இந்த படம், அக்ஷய் குமாரின் பச்சன் பாண்டே திரைப்படத்தையும் வீழ்த்தி விடுமோ என்று பாலிவுட் வட்டாரம் அஞ்சுகிறது. தமிழகத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ட்வீட் போட்டு பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி படத்திற்கு அதிக எதிர்ப்பு மற்றும் எதிர் கருத்துகள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து வருவதால், இந்த திரைப்படம் வட இந்தியாவில் மட்டுமே நன்றாக ஓடும் என்று கணிக்கின்றனர்.