நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ள ‘கோப்ரா’ திரைப்படம் 3 மணி நேரம் 3 நிமிடம் 3 நொடி நீளம் கொண்டது என்றும் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் கோப்ரா படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 2 முறை படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோப்ரா வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விக்ரம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தற்போது படத்தின் விளம்பர பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் "கோப்ரா" படக்குழுவினர் ஆகஸ்ட் 23 ஆம் முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பல்வேறு ஊர்களுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். அதன்படி ஆகஸ்ட் 23 ஆம் தேதி திருச்சி மற்றும் மதுரை, ஆகஸ்ட் 24 ஆம் தேதி கோவை மாவட்டம், ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொச்சி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி பெங்களூரு மற்றும் ஆகஸ்ட் 28 ஆம் தேதியான இன்று ஹைதராபாத் சென்று ரசிகர்களை சந்தித்து படத்தை பிரோமோட் செய்து வருகின்றனர்.