நெட் பிளிக்ஸில் வெளியாகியுள்ள The Hunt For Veerappan தொடர் பலத்த சர்ச்சைகளை சமூக வலைத்தளங்களில் கிளப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’


சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்து   ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்ற தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  கிட்டதட்ட 4 தசாப்தங்களாக தமிழ்நாடு - கர்நாடகா மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பனை பற்றிய பல அறியப்படாத நிகழ்வுகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, கூட்டாளிகள், ஊர் மக்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் அனைவரது கருத்துகள் இடம் பெற்றுள்ளது. அதில் மூத்த வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாஸை வீரப்பன் கொலை செய்த நிகழ்வு வீரப்பன் நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 


இதையும் படிங்க..


Samudrayaan Mission: சந்திரயானை விடுங்க, சமுத்ரயான் தெரியுமா? ரூ.5000 கோடி செலவு, ஆழ்கடலில் 20 ஆயிரம் அடி பயணம்..!


ஸ்ரீனிவாஸின் வித்தியாசமான அணுகுமுறை 


என்னதான் வீரப்பனை பிடிக்க தங்களது நடை,உடை,ஸ்டைல் என அனைத்தையும் மாற்றினாலும் அவரை நெருங்கவே முடியவில்லை. குற்றவாளியை பிடிக்க இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று அவர்கள் இருக்கும் இடத்தை தேடி செல்வது அல்லது அவர்களை சரணடைய சொல்வது.  அப்போதுதான் சீனியர் வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாஸ் அளித்த பங்கு முக்கியத்துவம் பெற்றது.






அவர் கோபிநத்தம் மக்கள் மறுவாழ்வு பெற மிகுந்த ஆர்வம் காட்டினார். மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு விஷயத்தை முன் வைத்து வீரப்பனை காட்டிக் கொடுக்குமாறு சொல்ல இவரது அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. பாழடைந்த கோயிலை சீரமைத்தது, வீடு கட்டி கொடுத்தது, கர்ப்பிணிகளுக்கு உதவியது என அந்த கிராம மக்களிடையே நன்கு பரீட்சையமானார். எதிர்பார்த்தது போலவே மக்களிடம் இருந்து வீரப்பன் குறித்த தகவல்கள் அவருக்கு வர ஆரம்பித்தது. 


தங்கை மரணத்தால் கோபமான வீரப்பன்


இப்படியான நேரத்தில் கர்நாடக காவல்துறை வட்டாரத்தில் இருந்த அதிருப்தியால் ஸ்ரீநிவாஸ் மீது பல்வேறு வதந்திகள் பரவ ஆரம்பித்தன. குறிப்பாக வீரப்பனின் தங்கை மாரிக்கு ஸ்ரீநிவாஸ் செவிலியர் வேலை வாங்கி கொடுத்தார். இதனால் அவரை மாரி நம்பினார். ஒரு நாள் மாலை ஆறு முதல் ஏழு மணிக்குள் ஜீப்பில் சீனிவாசன் மாரியை அழைத்து செல்வதை ஊர்மக்கள், காவல்துறையினர் கவனித்தனர். இருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வதந்தி வெளிப்படையாகவே பரவியது. 


இந்த நிலையில் வீரப்பன் தங்கைக்கு நேரடியாகவே கடிதம் எழுதுகிறார். அதில் வீரப்பன் என்றால் உலகத்துக்கே தெரியும் அப்படி இருக்கையில், கிராமத்தில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய். எனது எதிரி ஸ்ரீனிவாஸ் உடன் தொடர்பில் இருக்கிறாயா?.. நீ என்னுடைய தங்கையாக இருந்தால் என்றால் ஸ்ரீனிவாசை வீட்டுக்கு வரவழைத்து எண்ணையை பழுக்க காட்சி அவர் முகத்தில் ஊற்றிக் கொல்ல வேண்டும் என தெரிவித்து இருந்தார்.


அதேசமயம் போலீஸ் மாரியிடம் உங்கள் அண்ணனை சந்தித்ததை பற்றி உண்மையை சொல்லாவிட்டால் மின்சாரம் கொடுத்து டார்ச்சர் செய்து விடுவோம் என மிரட்டுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து கலங்கிப்போன மாரி விஷம் குடித்து இறந்து போகிறார்.  தங்கை இறந்த தகவல் நியூஸ் பேப்பர் மூலமாக வீரப்பனுக்கு தெரிய வருகிறது. அன்றைய தினம் எதுவும் சாப்பிடாமல் கண் கலங்கியுள்ளார். 




ஸ்ரீனிவாஸ் மரணம் 


இந்த நிலையில் வனத்துறை, ஸ்ரீனிவாசிடம் உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது உடனடியாக இந்த ஆபரேஷனில் இருந்து விலகுமாறு தெரிவித்துள்ளது. ஆனால் தன்னிடம் வேறு ஒரு திட்டம் உள்ளது.  மேலும் 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்குமாறு அவர் கேட்டுள்ளார். அவர் அந்த 15 நாட்களில் அர்ஜுனனுக்காக காத்திருந்தார். அர்ஜுனன் யார் என்றால் வீரப்பனின் தம்பி ஆவார். ஸ்ரீனிவாஸ் பேச்சைக் கேட்ட அவர் தனது அண்ணனுக்கு கடிதம் எழுதுகிறார்.


அதில் உன்னால் மாரி இறந்தது தொடங்கி, குடும்பத்தினர் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர் எனவே சரணடையுமாறு தெரிவிக்கிறார். இதனை பார்த்த வீரப்பன் சரணடைய ஒப்புக்கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு ஸ்ரீனிவாசை வர சொல்கிறார். அர்ஜுனன், ஸ்ரீனிவாஸ், ஊர்க்காரர் ஒருவர் என மூன்று பேரும் வீரப்பனை சந்திக்க செல்கின்றனர். போகும்போதே கால் தடுக்கி ஸ்ரீனிவாஸ் கீழே விழுந்துள்ளார். ஊர்காரர் அபசகுனமாக இருக்கிறது என அவரிடம் எச்சரித்துள்ளார். ஆனால் என்றைக்குனாலும் இருந்தாலும் உயிர் போகப் போவது தானே வாங்க போகலாம் என தைரியம் சொல்லி கூட்டி சென்று இருக்கிறார். 


வழியில் ஒரு ஆறு ஒன்று உள்ளது. அதன் கரையில் நின்று காலில் சேறாகியதால் தனது காலை கழுவிக் கொண்டிருக்கும்போது கண நேரத்தில் துப்பாக்கி குண்டுகள்  ஸ்ரீனிவாஸ் உடலை துளைத்தன. 


வீரப்பன் வெளியிட்ட ஆடியோ


இதன் பின்னர் வெளியான வீரப்பன் ஆடியோவில், “ நான் சரணடைய சொன்னவுடன் ஸ்ரீனிவாஸ் நம்பி விட்டான். நான் போய் அவனிடம் சரண்டர் ஆவேனா? . அவனை கொலை செய்வதற்காக நீண்ட நாட்கள் நான் காத்திருந்தேன். என்னை பிடித்து இந்திய அளவில் பதக்கம் வாங்க என்னென்ன டிராமா செய்தார். என் தங்கச்சிக்கு சாவுக்கு காரணமானவர். மண்ணெண்ணெய் ஊற்றி அவர் உடலில் நெருப்பு பற்ற வைத்தேன். அவன் முகத்தில் நெருப்பை வைத்து கருக்கினேன். ஸ்ரீனிவாஸ் செய்த துரோகத்தை நினைத்தபோது எனக்கு வெறி அடங்கவில்லை. அதனால் தலையை வெட்டி எடுத்து வந்து விட்டேன்” என தெரிவித்திருந்தார். ஸ்ரீனிவாஸ் ஏற்கனவே ஊர் மக்களுக்கு நல்லது செய்திருந்ததால் அவரின் மரணம் மிகப்பெரிய துக்கமாக மாறி இருந்தது. 


இதனைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த எபிசோடின் ஆரம்பத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, “என் கணவருக்கு துரோகம் செய்தால் பிடிக்காது என சொன்னார்.ஆனால் ஸ்ரீனிவாஸ் விஷயத்தில் வீரப்பன் செய்தது நம்பிக்கை துரோகம் இல்லையா என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.