சந்தன கடத்தல் வீரப்பன் பல ஆண்டுகளாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய 4 மாநில போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். பின்னர் தமிழக அதிரப்படை காவல் துறையினர் சந்தனகடத்தல் வீரப்பனை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். வீரப்பனைப் பிடிக்க காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஆவணத்தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வீரப்பனைக் குறித்து முந்தையதாக வெளியாகி உள்ள சில படங்கள் தொடர்களைக் காட்டிலும் இது சிறப்பான ஒரு ஆவணமாக கருதப்படுகிறது.
ராபின்ஹுட்?
இந்தியாவின் ராபின்ஹுட் என்று சிலரால் இன்றும் அழைக்கப்படுபவர் வீரப்பன். கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரண்டு மாநில அரசுகள் அவரைத் தேடிவந்தும் காவல் துறைகளில் கண்களில் இருந்து தப்பி வந்தவர். யானைத் தந்தங்கள் மற்றும் சந்தன மரங்களை கடத்தும் குற்றங்களுக்காக காவல் துறை இவரைத் தேடி வந்தது. தனது வாழ்நாளில் கிட்டதட்ட 1000 யானைகளை கொன்றழித்தவர் வீரப்பன். பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள சந்தன மரங்களை கடத்தியுள்ளார்.
வீரப்பன் வேட்டை ( The Hunt For Veerappan)
வீரப்பனைப் பிடிக்க தனிப்பிரிவு அமைக்கப்படுகிறது. வீரப்பன் வேட்டை தொடங்குகிறது. எத்தனையோ முயற்சிகள் செய்தும் வீரப்பனை பிடிக்க தோல்விடைந்தது காவல்துறை. இந்த ஒட்டுமொத்த தேடுதல் பனியில் பல்வேறு காவல் துறையினர் உயிரிழந்தனர். அப்பாவி மக்கள் காவலர்களால் கொடுமை செய்யப்பட்டனர். சில மக்கள் வீரப்பனை தங்களது ராபின்ஹுட்டாக பார்த்தார்கள். இந்த ஒட்டுமொத்த வரலாற்று நிகழ்வை பதிவு செய்யும் நோக்கத்தில் எடுக்கப்பட்டிருப்பதே இந்த ஆவணத் தொடர். பல்வேறு தரப்பினரின் வாக்குமூலங்கள் வழியாக வீரப்பன் குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை இந்த தொடர் அளிக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் ஒரு சாதாராண மனிதன் இரு மாநில அரசாங்கத்திற்கு எவ்வளவு சவாலாக இருந்தார் என்கிற கோணத்திலும் இந்த ஆவணம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
படக்குழு
மொத்தம் நான்கு எபிசோட்களைக் கொண்ட இந்த ஆவணத்தொடர் செல்வமணி செல்வராஜால் இயக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட நிலா என்கிற சுயாதீனப் படத்தை செல்வமணி இயக்கியிருந்தார் . தற்போது வீரப்பன் தொடர் மூலம் மேலும் பரவலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.