ராகுல் காந்திக்கு நிம்மதி பெருமூச்சு:
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர். இந்த தீர்ப்பை வரவேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"என்ன நடந்தாலும் கடமையை தொடர்வேன்"
தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "என்ன நடந்தாலும் கடமை தவற மாட்டேன். இந்தியாவின் கருத்தாக்கத்தை பாதுகாப்பேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், "ராகுல் காந்தி காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கியது இனி செல்லாது. ராகுல் காந்தி மீண்டும் எம்பியாக தொடர மக்களவை சபாநாயகர் ஆணை பிறப்பிப்பார் என நம்புகிறேன். பாஜக ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். இந்தியக் குற்றவியல் சட்டம் 162 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.
இந்தியாவில் இதுவரை வாய்மொழி அவதூறுக்காக எந்தவொரு நபருக்காவது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதா? நாங்கள் ஆராய்ந்த வரை 162 ஆண்டுகளில் இதுபோன்ற வழக்குகளில் எந்தவொரு நீதிமன்றமும் 2 ஆண்டுகள் என அதிகபட்ச தண்டனை விதித்தே இல்லை. அதுவே ஒரு பிழை. அதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. இது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளோம்.
இந்த தீர்ப்பை இன்றோ நாளையோ சபாநாகருக்கு அனுப்புவோம். திங்கள் கிழமை இது குறித்து சபாநாயகர் முடிவெடுப்பார். சபாநாயகர் ஆணையிட்டால் உடனடியாக ராகுல் காந்திக்கு எம்பி பதவி கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் தெரிவித்த முக்கிய கருத்துகள்:
முன்னதாக, அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் பல முக்கிய கருத்துகளை தெரிவித்திருந்தது. இன்று வழங்கப்பட்ட உத்தரவில், "இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499இன் கீழ் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம். கற்றறிந்த விசாரணை நீதிபதி, அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கியுள்ளார். இந்த அவதூறு வழக்கின் விசாரணையின் போது மனுதாரருக்கு (ராகுல் காந்தி) அறிவுரை வழங்கியதை தவிர, கற்றறிந்த நீதிபதியால் வேறு எந்த காரணமும் வழங்கப்படவில்லை.
அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதால்தான் மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(3) கீழ் நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் குறைவாக தண்டனை வழங்கியிருந்தாலும் இந்த சட்ட பிரிவு பொருந்தி இருக்காது" என குறிப்பிடப்பட்டுள்ளது.