அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, உச்சநீதிமன்றம் பரபர உத்தரவு பிறப்பித்துள்ளது. கீழமை நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.


உச்ச நீதிமன்றம் பரபர உத்தரவு:


இன்றைய உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தொடரும் சூழல் உருவாகியுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 


அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம், உத்தரவு குறித்து குறிப்பிடுகையில், "ராகுல் காந்தி காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கியது இனி செல்லாது. ராகுல் காந்தி மீண்டும் எம்பியாக தொடர மக்களவை சபாநாயகர் ஆணை பிறப்பிப்பார் என நம்புகிறேன்" என்றார்.


"162 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்று தண்டனை வழங்கியதில்லை"


தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பாஜகவை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார். "பாஜக ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். இந்தியக் குற்றவியல் சட்டம் 162 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் இதுவரை வாய்மொழி அவதூறுக்காக எந்தவொரு நபருக்காவது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதா?


நாங்கள் ஆராய்ந்த வரை 162 ஆண்டுகளில் இதுபோன்ற வழக்குகளில் எந்தவொரு நீதிமன்றமும் 2 ஆண்டுகள் என அதிகபட்ச தண்டனை விதித்தே இல்லை. அதுவே ஒரு பிழை. அதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. இது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளோம்.


இந்த தீர்ப்பை இன்றோ நாளையோ சபாநாகருக்கு அனுப்புவோம். திங்கள் கிழமை இது குறித்து சபாநாயகர் முடிவெடுப்பார். சபாநாயகர் ஆணையிட்டால் உடனடியாக ராகுல் காந்திக்கு எம்பி பதவி கிடைக்கும்" என தெரிவித்துள்ளார். 


தீர்ப்பை வரவேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை வயநாடு தொகுதி தக்க வைத்துள்ளது. அவதூறு வழக்கில் அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.


இந்த முடிவு, நமது நீதித்துறையின் பலம், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றின் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.