வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தி கோட்' (The Greatest of All Time) திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.


கேரளாவில் திக்குமுக்காடிப்போன விஜய்


இப்படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கி கேரளாவில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு நடிகர் விஜய்க்கு வரலாறு காணாத வரவேற்பு வழங்கப்பட்டது. கேரள ரசிகர்கள் தனக்கு வழங்கிய அன்பால் திக்குமுக்காடிப்போன நடிகர் விஜய், செல்ஃபிக்கள், வீடியோக்கள், பறக்கும் முத்தங்கள் என இணையத்தில் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை கடந்த சில நாள்களாக வெளிப்படுத்தி வருகிறார்.


பிடிஎஸ் போஸ்டர்


இந்நிலையில், நேற்று இரவு ‘தி கோட்’ படத்தின் பிடிஎஸ் காட்சி போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. முதன்முதலாக வெளியான தி கோட் படத்தின் போஸ்டரில், தற்போது வெங்கட் பிரபு இடம்பெற்றிருப்பது போன்ற படப்பிடிப்பு காட்சி வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


 






முதல் சிங்கிள் 


இந்நிலையில் தி கோட் படத்தின் முதல் அப்டேட் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் இறுதிக்கட்ட ஷெட்யூல் நெருங்கியுள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட்களை ஏப்ரல் மாதம் தொடங்கி வரிசையாக வழங்கத் திட்டமிட்டிருப்பதாக முன்னதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் தி கோட் படத்தின் முதல் அப்டேட்டாக முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் - யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ள நிலையில், பாடல்கள் பற்றிய பெரும் எதிர்பார்ப்பில் யுவன் ரசிகர்களும் உள்ளனர்.


ஜூலையில் ரிலீஸ்?


தி கோட் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், நடிகர்கள் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், நடிகைகள் சினேகா, லைலா, மீனாக்‌ஷி சௌத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.


தி கோட் படத்தின் இறுதிக்கட்ட பட.ப்பிடிப்புக்காக படக்குழு அடுத்ததாக ரஷ்யா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தன் சினிமா கரியரில் இன்னும் தான் கமிட் ஆகியுள்ள ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு முழுநேர அரசியல் பயணத்தில் ஈடுபட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், அவரது  சினிமா பயணம் முடிவுக்கு வருவதை அடுத்து ஏற்கெனவே ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.


இந்நிலையில், தி கோட் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. வரும் ஜூலை ஜூலை 31ஆம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.