தி கோட்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரசாந்த், பிரபு தேவா , சினேகா , லைலா ,மோகன் , மீனாக்‌ஷி செளதரி , வைபவ் , பிரேம்ஜி , ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 


தி கோட் படத்திற்கு சென்ஸார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. முன்பு படத்தின் நீளம் 2 மணி நேரம் 58 நிமிடங்களாக இருந்த நிலையில் தற்போது படத்தின் நீளம் சில நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு 3 மணிநேரம் 3 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தி கோட் படத்தின் படக்குழுவினர் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன. தி கோட் படத்தின் சண்டைப் பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்


ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த விஜய்


பொதுவாக விஜய் தனது படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகளுக்கு டூப் நடிப்பதை விரும்பாதவர். எவ்வளவு ஆபத்தான ஸ்டண்ட் என்றாலும் அதை பெரும்பாலும் தன்னால் செய்யமுடியுமா என்பதை முயற்சி செய்துபார்த்த பின் தன்னால் முடியாத பட்சத்தில் டூப் போட அனுமதிப்பார்.

முன்னதாக விஜய் நடித்த துப்பாக்கி , தெறி , கடந்த ஆண்டு வெளியான லியோ உள்ளிட்ட படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் தானே நடித்திருந்தார் விஜய். இதனைத் தொடர்ந்து தற்போது தி கோட் படத்திலும் ஸ்டன்ட் காட்சிகளில் விஜய் டூப் இல்லாமல் நடித்துள்ளதாக அப்படத்தின் சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்புராயன் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக தி கோட் படத்தில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளில் விஜய் நடித்துள்ளார். படத்தில் உள்ள ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்தவர்கள் ஹாலிவுட்டில் டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபள் படத்தைப் போல் தி கோட் படம் இருப்பதாக தெரிவித்ததாக திலிப் சுப்புராயன் தெரிவித்துள்ளார்.





முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்கள் இருப்பதாகவும் சுவாரஸ்யமான நிறைய தருணங்களால் இப்படம் நிறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.