சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமன் மற்றும் தலைமை காவலர் ராமச்சந்திரன் ஆகியோர் அப்பகுதியில் சென்ற கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அனைத்து ஆவணங்களை சரியாக வைத்திருக்கும் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனத்திற்கும் லஞ்சம் பெற்ற நிலையில் அதனை அங்கிருந்து நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த காவலர் அந்த நபரின் சட்டையை பிடித்து இழுத்துச் சென்று காவலர் வாகனத்தில் ஏற்றிச்சென்று அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் இப்பகுதியில் குடியிருக்க வேண்டுமா வேண்டாமா என்று மிரட்டலும் எடுத்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக கலைத்தரங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராமன் மற்றும் தலைமை காவலர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை மற்றும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சேலம் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு நடவடிக்கை எடுத்தார். நேற்று இரவு உயர் அதிகாரிகள் காவலர்கள் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி அளித்த அறிக்கை அடிப்படையில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். சேலம் மாநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் லஞ்சம் வாங்கிய இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.