Aadujeevitham: Corona Days - மலையாள சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆடுஜீவிதம் படம் கொரோனா காலத்தில் படமாக்கப்பட்ட போது ஏற்பட்ட கஷ்டத்தை படக்குழு வெளியிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடுஜீவிதம்:
மலையாளத்தில் நாவலாக வெளியாகி சாதனை படைத்த புத்தகம் ஆடுஜீவிதம். ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்டு பிரபலமான ஆடுஜீவிதம் நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அரபு நாட்டிற்கு வேலைக்காக செல்லும் நாயகன், பாலைவனத்தில் ஆடு மேய்க்கிறான். அங்கிருந்து தப்பிக்க முடியாமல் ஆடுகளுடன் ஒருவனாக மாறும் அந்த ஹீரோ இறுதியில் என்ன ஆனான் என்பதே கதை.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் நடித்து வரும் பிருத்விராஜ், பிளெஸ்ஸி இயக்கியுள்ள ஆடுஜீவிதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்திற்காக தனது உடலை 30 கிலோ வரை குறைத்துக் கொண்ட பிருத்விராஜ், ஆடுமேய்க்கும் நபராக நடித்துள்ளார். 2020ம் ஆண்டில் இருந்து உருவாகி வரும் இந்த படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. படத்தில் பிருத்விராஜ்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
மேக்கிங் வீடியோ:
பிருத்விராஜ் அடந்த தாடியுடன் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆடுஜீவிதம் படம் உருவாகுவதற்கு முன்னதாக தாங்கள் பட்ட கஷ்டங்களை வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊடரங்கிற்கு முன்னதாக ஆடுஜீவிதம் படத்தின் ஷூட்டிங்கிற்காக பிருத்விராஜ் உட்பட படக்குழுவினர் ஜோர்டானிற்கு சென்றுள்ளனர். படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், படத்தின் ஷூட்டிங் தொடங்க முடியாமல் இருந்த படக்குழு வெளியே எங்கும் செல்ல முடியாமல் பாலைவனத்தில் தவித்துள்ளனர். பிருத்விராஜ், படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸி உள்ளிட்ட 85 பேர் பாலைவனத்தில் தங்கியுள்ளனர். அங்கு தினமும் மன உளைச்சலுக்கு ஆளானதும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்ததும், விளையாட்டு, ஆடல் பாடல் என அந்த துயர நாட்களிலும் மகிழ்ந்ததாகவும் படக்குழு வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் குடும்பத்தை பிரிந்து, படப்பிடிப்பை தொடங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான படக்குழு பகிந்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.