சூர்யா ஏற்கனவே நிறையப் படங்களில் நடிக்க இருப்பதால், வாடிவாசல் படத்தில் அவருக்கு பதிலாக தனுஷ் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வாடிவாசல்
சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை இயக்குநர் வெற்றிமாறன் படமாக்க இருப்பதாக தகவல் வெளியானதில் இருந்தே இப்படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. வெற்றிமாறனின் சிறந்த படங்களாக கருதப்படும் பொல்லாதவன், ஆடுகளம் , வடசென்னை , அசுரன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் தனுஷ் தான் நடிக்கப் போகிறார் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் இப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. வெற்றிமாறன் சூர்யா காம்போவை பார்க்க ரசிகர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டார்கள்.
நிலுவையில் நின்ற படப்பிடிப்பு
கடந்த 2020 ஆம் ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியானது, கலைப்புலி எஸ் தானு இந்தப் படத்தை தயாரிக்க இருந்தார். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படம் என்பதால் இந்தப் படத்திற்கு எக்கச்சக்கமான ப்ரீ ப்ரோடக்ஷன் மற்றும் ஆய்வுகள் வேலைகளை படக்குழு தொடங்கியது. இப்படியான நிலையில் சூர்யா பிறந்தநாளுக்கு வாடிவாசல் படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகியது.
வாடிவாசல் படத்தின் இந்த வேலைகள் ஒருபக்கம் நடைபெறும் காலத்திற்குள் வெற்றிமாறன் குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தொடங்கினார். வெறும் 40 நாளில் முடிய வேண்டிய இப்படம் 4 ஆண்டுகள் இழுத்துவிட்டது. அந்தப் படம் தான் விடுதலை. 4 கோடியில் முடிய வேண்டிய இப்படம் 60 கோடியாக மாறி இரண்டு பாகங்களாக உருவெடுத்தது.
கடுப்பான சூர்யா
விடுதலை முதல் பாகம் வெளியானப் பிறகு இரண்டாம் பாகத்திற்கான வேலைகளும் எதிர்பார்த்த காலத்தைவிட அதிக நேரம் எடுத்துக் கொண்டன. இடையிடையில் வாடிவாசல் படத்திற்கான வேலைகளை வெளிநாடுகளில் செய்துவந்தார் வெற்றிமாறன், மறுபக்கம் சூர்யா சொந்தமாக ஒரு காளையை வளர்த்து பயிற்சி எடுத்து வந்தார். அடுத்தபடியாக சிவா இயக்கத்தில் கங்குவா படத்திலும் நடித்து முடித்தார். குறிப்பிட்ட காலத்தில் வாடிவாசல் படம் தொடங்காததால் கடுப்பான சூர்யா சுதா கொங்காராவிடம் தனது அடுத்தப் படத்தைக் கொடுத்தார்.
தற்போது வெற்றிமாரன் விடுதலை 2 படத்திற்கான வேலைகளை வெற்றிமாறன் முடித்துள்ளார் . ஆனால் சூர்யா சுதா கொங்காரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். இதற்கு அடுத்ததாக பான் இந்திய படமாக கர்ணா படத்தில் நடிக்க அவர் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாவதால் குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சூர்யா பிஸியாக இருப்பார்.
இதன்படி வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது, இப்போதைய நிலையில் சாத்தியமில்லை என்பதால் இப்படம் கைவிடப்படும் என்று சமூக வலைதளங்களில் கருத்து பரவியது. ஆனால் ஏற்கனவே படத்திற்காக படக்குழு நிறைய பணத்தை செலவிட்டுள்ளதால் இப்படத்தை கைவிடுவது தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தையே ஏற்படுத்தும்.
சூர்யாவுக்கு பதில் தனுஷ் ?
வாடிவாசல் படம் உருவாக வேண்டும் என்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி சூர்யாவுக்கு பதில் இப்படத்தில் வேறு ஒருவர் நடிப்பதுதான். வெற்றிமாறன் படத்திற்கு தனுஷைத் தவிர வேறு எந்த நடிகர் பொருத்தமாக இருக்க முடியும். தற்போதைய தகவல்படி வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக தனுஷ் நடிக்க தயாராக இருப்பதாகவும் தனுஷ் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, அதிகாரப்பூர்வமான தகவலை வெற்றிமாறன் சார்பில் இருந்து வெளிவருவதற்காக தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.