சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி ரசிகர்கள் மோதல்!


சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் கடந்த மே 18ஆம் தேதி நிகழ்ந்த போட்டியின் சூடு இன்னும் ரசிகர்களிடம் குறையவில்லை என்று தான் சொல்லவேண்டும். புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருந்த விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி கடும் போராட்டத்திற்கு பின் ஃப்ளே ஆஃப் செல்வதற்கான இறுதிப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொண்டது.


இந்தப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி முதல் நான்கு அணிகளில் இடம்பெற்றது பெங்களூரு அணி. வெற்றிபெற்ற கொண்டாட்டத்தில் ஆர்.சி.பி ரசிகர்கள் சி.எஸ்.கே ரசிகர்களுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே வம்பிழுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகின. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணி ரசிகர்களுக்கு இடையில் கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. போட்டி முடிந்த பிறகு தோனி ஆர்.சி.பி அணிக்கு கைகொடுக்காமல் சென்றது பெரும் விவாதத்தைத் தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் விஜய்யின் தி கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் இப்படிப் பதிவிட்டுள்ளார். 


சி.எஸ்.கே ரசிகர்களை சீண்டாதீர்கள்


மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகரான வெங்கட் பிரபு (Venkat Prabhu) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனியின் மிகப்பெரிய ரசிகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தனது படங்களிலும் அவர் இதை வெளிப்படுத்தி இருக்கிறார்.  தனது எக்ஸ் பதிவில் “2024ஆம் ஆண்டு உட்பட இதுவரை நடந்த 17 ஐ.பி.எல் சீசன்களில் 12 முறை சென்னை அணி ப்ளே ஆஃபுக்கு தகுதி பெற்றுள்ளது. 10 முறை இறுதிப் போட்டி வரை சென்றுள்ளது. 5 முறை கோப்பையை வென்றுள்ளது. வெறும் மூன்று முறை மட்டுமே சென்னை அணி ப்ளே ஆஃபுக்கு தகுதி பெறவில்லை.


மீதி இரண்டு ஆண்டுகள் சென்னை விளையாடவில்லை. அது ஏன் என்று உங்களுக்கே தெரியும். அதுக்குள் நாம் செல்ல வேண்டாம்.  சி.எஸ்.கே ரசிகர்களாக இருப்பதற்கு நாங்கள் வாழ்நாள் முழுவதும் பெருமைப்படுவோம். உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள், ஆனால் எங்களை சீண்டாதீர்கள். இப்படிக்கு தி கோட் படக்குழு, இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் தி கோட் என்று” என்று வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.